சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் மாமன்ற கூட்டமானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இத்தீர்மானத்திற்கான ஒப்புதல் 2 மணி அளவில் பெறப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போதுவரை அம்மா உணவகங்களில் மகளிர் சுய உதவி குழுவால் தயாரிக்கப்படும் இக்காலை உணவு திட்டத்தின் உணவுகளானது தனியார் வசம் செல்லும் நிலையில், இதனை செயல்படுத்தவிருக்கும் தனியார் ஒப்பந்ததாரர் 12 விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
12 விதிகளில்,
“தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில்தான் உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் காலை 8 மணிக்கு உணவானது வழங்கப்பட வேண்டும்.
உணவுகளை தயாரிக்கும் ஒவ்வொரு நாட்களுக்கு முன்பும் அக்குழுவின் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட்டால் அப்போதும் காலை உணவை வழங்க வேண்டும்.
உணவு பட்டியலில் மாற்றம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரருக்கு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் .
ஒப்பந்ததாரரின் மீது தொடர் புகார் எழுந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி: “இதனை செயல்படுத்த 19 கோடி ரூபாயை தனியாருக்கு மாநகராட்சி கொடுக்கவுள்ளது. மேலும் இவர்களின் பணிகளை கண்காணிக்க துணை ஆணையாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவானது நியக்கமிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.