விஞ்ஞானிகள் ஆன்மீகத்தை ஏற்பதில்லை, இந்தத் துறையில் ஆணாதிக்கம் தான் அதிகம், இவர்கள் கலாச்சாரம் என்ற பாதையை விரும்புவதில்லை என நம்மை அடிமைப்படுத்திய பல மேற்கத்திய சிந்தனைகளை தகர்த்தெறிந்த நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3ஐ ஏவுவதற்கு முன்னால், திருமலையானின் தரிசனம் மற்றும் புடவை அணிந்த சக்தி வாய்ந்த பெண் விஞ்ஞானிகளின் உழைப்பு இதை சாத்தியமாக்கியது.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பெண்ணியத்தை உரக்கச் சொன்ன
பாரதியின் பாடல் வரிகள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரின் விடுதலைச் சிந்தனை, பெண் சக்தி என்ற பல தொலைநோக்கு பார்வைகள் இன்று நம் பாரதம் சாதிக்கும் ஒவ்வொன்றுக்கும் வித்தாக உள்ளது.
இஸ்ரோவின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பல ஆண்டுகளாக பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் பங்களித்து வரும் நிலையில், சந்திரயான் 3ல் 100 க்கும் மேற்பட்ட பெண்கள், வடிவமைப்பு, சோதனை, செயல்படுத்துதல் என பல முக்கிய பங்கு வகித்துள்ளனர். இஸ்ரோவில் இருந்து சந்திரயான் 3 ஏவப்பட்ட நேரத்திலும் தரையிறங்கும் நேரத்திலும் கட்டுப்பாட்டு அறையில் பெண் விஞ்ஞானிகள் இருந்தது உண்மையிலேயே எல்லோரையும் பெருமை அடையச் செய்தது.
இந்த உழைப்பை பெருமை சேர்க்கும் விதமாக சந்திரயான் 3 தரை இறங்கிய இடத்தை “சிவசக்தி” என பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டு விஞ்ஞான உலகில் ஆண் பெண் என இருவர்களின் பங்களிப்பைம் அங்கீகரித்தார்.
விண்ணை எட்டும் சாதனையை கண்டுள்ளோம் ஆனால் விண்ணையும் தாண்டி சாதிக்கலாம் என நம் பாரதப் பெண்கள் நிரூபித்துள்ளனர்.
நேற்று வெற்றிகரமாக சூரியனை ஆராயச் சென்ற ஆதித்யா-L1ன் திட்ட இயக்குனராக இருப்பவர் நைஜர் ஷாஜி, இவர் இதற்கு முன் வேறு பல திட்டங்களில் இணைந்திருந்தாலும் 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதித்யா-L1ன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சூரியனின் ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாகும் அதையும் மிகத் தெளிவாக வெற்றியடைய செய்தார்.
வி. பிருந்தா, இஸ்ரோ தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் தர இயக்குனராக உள்ளார். இவர் ஏவுகணையின் வாகன கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதல் ( GPS )அமைப்புகளில் சிறந்த விஞ்ஞானி. சந்திரயான் 2ல் விண்கலத்தின் தரை ஆதரவுக்கான ISTRAC யின் முக்கிய மென்பொருள் வடிவமைப்பு குழுவின் தலைமையும் தாங்கினார்.
சந்திரயான் 3 ன் இணைத்திட்ட இயக்குனர்
கே. கல்பனா, சந்திரயான் 2 திட்ட இயக்குனர் எம். வனிதா மற்றும் சந்திராயன் 2 பணி இயக்குனர் ரிது கரிதாலும் எல்லா இந்தியர்களின் மனதிற்கு நெருக்கமான சொந்தங்களாகிவிட்டனர். விஞ்ஞானிகளான வனிதா, ரிது இருவரும் இந்திய விண்வெளி பயணத்தை முன்னின்று நடத்திய முதல் பெண்கள், என்று வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சந்திரயான் 2 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர், சந்திரயான் 2 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதினாலும், வெற்றிகரமாக விலைமதிப்பற்ற தரவுகளை அனுப்பி சந்திரயான் 3ன் பயணத்தை வெற்றியடைய செய்தது. இந்தத் திட்டங்களில் நேரடியாக சில பெண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கீன வர்கீஸ், பீனா A P, அதுலா தேவி, நந்தினி, ஹரினாத், ஷிவானி, ஷினா சுனில், ரூபா MV வித்யா என 25% பெண் விஞ்ஞானிகளின் தாயாக இஸ்ரோ உள்ளது.
ஒவ்வொரு பங்களிப்பாளரும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளனர். சந்திரயான் 3ல் திட்டத்தில், ஏராளமான கல்வியாளர்கள், தொழில் துறை மற்றும் பொது துறை நிறுவனங்கள் தீவிரமாக பங்கேற்றது.
இவர்கள் அனைவருமே பல சவால்களை எதிர்கொண்டு தேசத்தை பெருமைப்படுத்தி வருகின்றனர். பெண் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய இஸ்ரோவின் சாதனைகளை தாண்டி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) திட்டத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தும் வருகின்றனர்.
பெண்கள் தலைவர்களாகவும், பொது துறைகளில் அவர்களின் பங்களிப்பு மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகவே காணப்படுகிறது. சிலர் அதை ஏற்க மறுத்தாலும் இன்னும் பல சாதனைகளுடன் பாரதம் தலை நிமிர்ந்து நடை போடுகிறது.