எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) 59-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
எல்லைகள் பாதுகாப்பாக இல்லையென்றால், எந்த ஒரு நாடும் வளர்ச்சியடையவோ, செழிப்படையவோ முடியாது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதாக இருக்கட்டும் அல்லது சந்திராயன்-3 திட்டமாக இருக்கட்டும், அனைத்தும் சாத்தியமாவதற்கு நாட்டின் எல்லைகள் உங்கள் தியாகத்தால் பாதுகாப்பாக இருப்பதுதான் காரணம். இந்த நாட்டின் வளர்ச்சியின் வேராக எல்லை பாதுகாப்பு படை உள்ளது.
எல்லை பாதுகாப்பு படையின் 59-வது எழுச்சி நாளை முன்னிட்டு, பிஎஸ்எப் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். நமது வீரர்களால் இந்த நாடு பெருமையடைகிறது. பாகிஸ்தான் எல்லையாக இருந்தாலும், வங்கதேச எல்லையாக இருந்தாலும், தீவிரவாதிகள் ஊடுருவும்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் இருப்பதால்தான், என்னால் பதற்றமின்றி அமைதியாக தூங்க முடிகிறது. எல்லைகளை பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.