மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட விநியோகத்தில் தமிழகத்தில் ஏராளமான குளறுபடிகள் அரங்கேறி இருப்பதாகவும், ஆகவே திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பாரதம் முழுவதும் இருக்கும் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்ஜீவன் என்கிற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஜல்சக்தி அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள 1 கோடி வீடுகளுக்கு 2024 மார்ச் மாதத்துக்குள் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக 4,600 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு. ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் இப்பணிகள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடக்கவில்லை. இதனால், திட்ட இலக்கில் வெறும் 50 சதவிகிதம் மட்டுமே இதுவரை முடிந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட இணைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பைப்புகள் தரமற்றதாக இருந்ததால் சேதமடைந்து வருகின்றன. இந்த பைப்புகள் பிரத்யேகமாக மொத்தமாக வாங்கப்பட்டதால், கடைகளில் கிடைப்பதில்லை. இதனால், சேதமடைந்த பைப்புகளை சரிசெய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. மேலும், ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கின்றன. ஆகவே, பணிகளை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்புகளை வழங்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.