ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதியை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளி இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அச்சென் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் சர்மா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டுக்குச் சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பயங்கரவாதிகள், சஞ்சய் சர்மா மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார்கள். இதில், பலத்த காயமடைந்த சஞ்சய் சர்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் சர்மா உயிரிழந்தார்.
இதையடுத்து, மேற்கண்ட இடத்தை சுற்றிவளைத்த போலீஸார், தீவிர தேடுதல் ஈடுபட்டனர். மேலும், புல்வாமா மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு காஷ்மீர் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில், புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரில் பட்கம்புரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும், லோக்கல் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாதுகாப்புப் படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள், திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது. எனினும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க பாதுகாப்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீரி பண்டிட்டை கொலை செய்த பயங்கரவாதியை அடுத்த சில தினங்களிலேயே பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.