ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதும், ஆயுதங்கள் கடத்துவதும், உளவு பார்ப்பது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆகவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் ஊடுருவலை தடுக்கவும், பயங்கரவாதிகளிடம் இருந்து பண்டிட் சமூகத்தினரை பாதுகாக்கவும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஊடுருவல் மற்றும் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி வருகின்றனர்.
இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற ஆயுதம் ஏந்திய இரு பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றிருப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் பாலகோட்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர் நடமாடுவது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 2 பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் சுற்றி வளைத்து என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐ.இ.டி.) உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் பாலகோட் செக்டாரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.