ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பதை ராணுவம் உறுதி செய்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவ்ரி மாவட்டம் பிம்பர் காலி பகுதியிலிருந்து 20-ம் தேதி மாலை 3.15 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தின் சங்கியோடிக்கு இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் இச்சம்பவம் விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதன் பிறகுதான், இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பதை ராணுவம் உறுதி செய்திருக்கிறது.
பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி இத்தாக்குதல் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரஜவ்ரி செக்டாரில் பிம்பர் காலி மற்றும் பூஞ்ச் இடையே சென்று கொண்டிருந்த ராணுவ டிரக் ஒன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுடப்பட்டது. பலத்த கனமழை மற்றும் குறைவாக தென்படும் பாதை சூழலை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். வாகனம் பற்றி எரிய, தீவிரவாதள் கையெறி குண்டுகள் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.