ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அஸ்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, ரஜோரி மாவட்டம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்திருந்தன. எனினும், கடந்த 6 மாத காலமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில், ரஜோரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பார்கல் பகுதியில் ராணுவ முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன்கள் மனோஜ் குமார், லக்ஷ்மணன், நிஷாந்த் மாலிக் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களில் லக்ஷ்மணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும், இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில கூடுதல் டி.ஜி.பி. முகேஷ் சிங் கூறுகையில், “பயங்கரவாதிகள் சிலர், ரஜோரி மாவட்டம் பார்கல் பகுதியிலுள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியைத் தாண்டி செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இதைக் கண்ட ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. இதில், இந்திய வீரர்கள் 4 பேர் உயர் தியாகம் செய்திருக்கிறார்கள். எனினும், நமது வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
2018 பிப்ரவரியில் ஜம்மு பகுதியில் உள்ள சுஞ்ச்வான் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட முதல் பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல் நடந்த தினத்திற்கு முதல்நாள்தான், புல்வாமா மாவடத்தில் 25 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடவிருக்கும் நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில், இதுபோன்ற பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உதவியோடு பயங்கரவாதிகள் மேற்கொள்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி இருக்கிறது.