ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா, ஷோபியான் பகுதியில் 30 வருடங்களுக்குப் பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று திரையரங்கங்களை திறந்து வைத்த லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987-ம் ஆண்டுக்குப் பிறகு பயங்கரவாதம் தலைதூக்கத் தொடங்கியது. 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. காஷ்மீரி பண்டிட்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதர சிறுபான்மையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், பண்டிட்களும், சிறுபான்மையினரும் உயிருக்கு பயந்து, காஷ்மீரிலிருந்து வெளியேறி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இந்த பயங்கரவாதத்தால் மாநிலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதன் பிறகு, கடந்த 33 ஆண்டுகளாக அங்கு திரையரங்குகளே கிடையாது.
இந்த நிலையில், மத்தியில் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பா.ஜ.க. அரசு, 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, பயங்கரவாதத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, ஏராளமான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதோடு, பலரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் குறைந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பயங்கரவாத சம்பவங்கள் நடந்தாலும், ராணுவம், பாதுகாப்புப்படையினர் மற்றும் லோக்கல் போலீஸார் உடனுக்குடன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, காஷ்மீரி பண்டிட்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி மீண்டும் இடம் பெயரத் தொடங்கி இருக்கின்றனர். ஆகவே, மக்களின் பொழுது போக்கிற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் திரையரங்குகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. மாநில லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இத்திரையரங்குகளை திறந்து வைத்தார். இந்த திரையரங்கை ஐநாக்ஸ் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. 3 அரங்குகளுடன் நவீன ஓசைக் கருவிகள் வசதியுடன் சில்வர் திரை, சாய்வு இருக்கைகள் மற்றும் சாதாரண இருக்கைகள் என்று நவீன மாயமாக இத்திரையரங்கம் திறக்கப்பட்டிருக்கிறது. இத்திரையரங்கில் உணவகங்களும் கட்டப்பட்டிருக்கிறது.