காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை தொடங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் முக்கியமாக கருதப்பட்டவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்தபோது, அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர். கட்சியில் நிலவும் குழப்பங்களை தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அம்மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தவர். எனினும், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, காந்தி குடும்பத்திடம் இருந்து கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதினார்.
இதன் காரணமாக கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். மேலும், இவரது மாநிலங்களவை எம்.பி. பதவி நிறைவடைந்த நிலையில், மீண்டும் எம்.பி. பதவி வழங்க கட்சித் தலைமை முன்வரவில்லை. இதனால், கட்சித் தலைமை மீது ஆத்திரமடைந்தவர், பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இவர் பா.ஜ.க.வில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். விரைவில் கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று ஜனநாயக் ஆசாத் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய குலாம் நபி ஆசாத், கட்சிக் கொடியையும் வெளியிட்டிருக்கிறார்.