உலகிலேயே மிக உயரமானதாகக் கருதப்படும் செனாப் ரயில்வே பாலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று திறக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரமான ஸ்ரீநகரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் வகையில், ரயில்வே பாலம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ரியாசி மாவட்டத்தில் பக்கால் – கவுரி ஆகிய இடங்களுக்கு இடையே, செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில், 4,314 அடி நீளத்தில் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலமாக கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 1486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டு ரயில்வே பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் வளைவுப் பகுதி கட்டுமானமும் நிறைவடைந்தது.
இப்பாலம், இரும்பு மற்றும் கான்கிரீட் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிவரை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது. பாலத்தின் அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்த நிலையில், செனாப் ரயில்வே பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாலம், 266 கி.மீ. வேகம்வரை ரயில்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பாலம் அமைக்கப்பட்ட பகுதி சமதளமில்லாது என்பதால், இப்பாலத்தை கட்டமைப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பாலம் நேற்று இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் பங்கேற்றவர்கள், விழாவை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இப்பாலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் டவரைவிட 35 மீட்டர் உயரமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கொங்கன் ரயில்வே தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், “இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி என்பது மிக நீண்ட பயணமாகும். இது உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலமாகும். கடினமான மலைப்பகுதி, மோசமான வானிலை என பல சவால்களை கடந்து இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது” என்றார். இப்பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஆஃப்கன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் கிரிதர் ராஜகோபாலன் கூறுகையில், “ரயில்வே பால வளைவின் முக்கியப் பகுதியான ‘தங்க இணைப்பு’ பணி முடிவடைந்து விட்டதால், சுமார் 98 சதவீத பணிகளை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம்” என்றார்.