ஜம்மு காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி, 30,000 ரூபாய்க்காக தற்கொலைப் படையாக மாறி, இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதின் மூலம், பாகிஸ்தானின் பொருளாதாரம் எந்தளவுக்கு நெருக்கடியில் இருக்கிறது என்பது புலனாகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியிலுள்ள ஜங்கார் பிரிவில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி, மின்வேலியை துண்டித்து விட்டு 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக்கண்ட இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், அதிர்ச்சியடைந்த பயங்கரவாதிகள் மீண்டும் பாகிஸ்தான் பக்கமே திரும்பி ஓட்டம் பிடித்தனர். ஆனால், இந்திய வீரர்கள் சுட்ட குண்டு ஒரு பயங்கரவாதியின் கால் மற்றும் தோல்பட்டை பகுதியை பதம் பார்த்தது. இதனால், அந்த பயங்கரவாதி அங்கேயே விழுந்து விட்டான்.
இதையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் அந்த பயங்கரவாதியை மீட்டுக் கொண்டு வந்து ராணுவ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். பின்னர், அவனிடம் நடத்திய விசாரணையில், அவனது பெயர் தபாரக் உசைன் என்பது தெரியவந்தது. மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில், 32 வயதாகும் அவனை பாகிஸ்தான் ராணுவ கர்னல் யூனுஸ் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதன்படி அவர்கள் 4 பேரும் தற்கொலைப் படையாக மாறி இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்திருக்கிறார்கள். இதற்காக அவனுக்கு யூனுஸ் 30,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். தாக்குதல் நடத்துவதற்காக அவன் இந்திய ராணுவத்தின் 2 நிலைகளுக்கு சென்று வந்ததும் தெரியவந்திருக்கிறது.
எனினும், எதிரி என்றும் பாராமல் இந்திய ராணுவத்தினர் 4 பாட்டில் ரத்தம் கொடுத்து தபாரக் உசைனை காப்பாற்றி இருக்கிறார்கள். இத்தனைக்கும் தபாரக் உசைனின் ரத்தம் அரியவகையான ஓ நெகடிவ் வகையைச் சேர்ந்தது. இந்திய ராணுவத்தின் இச்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம், இதே தபாரக் உசேனும், அவனது சகோதரனும் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவத்தினரிடம் சிக்கி இருக்கிறார்கள். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் இருவரும் 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த முறை தபாரக் உசைன் தப்ப முடியாது என்பது நிச்சயம்.