யாசின் மாலிக்கை அடையாளம் காட்டினார் ருபையா சயீத்!

யாசின் மாலிக்கை அடையாளம் காட்டினார் ருபையா சயீத்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாஜி முதல்வர் முப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீத், தன்னை கடத்திய யாசின் மாலிக்கை அடையாளம் காட்டினார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீதின் மகள் ருபையா. இவர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர், 1989-ம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள லால் டெட் மெமோரியல் மகளிர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், 1989 டிசம்பர் மாதம் 8-ம் தேதி மருத்துவமனையில் இருந்து, நவ்காமிலுள்ள தனது வீட்டிற்கு மினி பஸ்ஸில் சென்றார். அப்போது, 5 பயங்கரவாதிகள் ருபையாவை கடத்திச் சென்று, பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு, ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்களது கூட்டாளிகளான, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பைச் சேர்ந்த 5 பேரை விடுவிக்கும்படி வலியுறுத்தினர்.

இந்த சமயத்தில், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முப்தி முகமது சயீத் அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லாவும் இருந்தனர். ஆகவே, சிறையில் இருந்த பங்கரவாதிகள் 5 பேரையும் பரூக் அப்துல்லா விடுவித்தார். இந்த பயங்கரவாதிகள்தான் ஜம்மு காஷ்மீரில் 1990 ஜனவரி மாதம் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தியவர்கள். அதாவது, மதம் மாறுங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்று சொல்லி காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ருபையா கடத்தல் வழக்கை ஜம்மு காஷ்மீரிலுள்ள தடா நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வசூலித்துக் கொடுத்ததாக 2019-ம் ஆண்டு யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் யாசின் மாலிக்குக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம்.

இந்த நிலையில்தான், கடத்தல் வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ருபையாவை கேட்டுக் கொண்டது நீதிமன்றம். அதன்படி, சிறப்பு தடா நீதிபதி முன்பு நேற்று ஆஜரானார் ருபையா சயீத். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடந்த இந்த விசாரணையின்போது, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், அவனது கூட்டாளிகள் முகமது ஜமான் மிர், மெஹ்ராஜ்-உத்-தின் ஷேக் மற்றும் மன்சூர் அகமது சோபி ஆகியோர்தான் தன்னை கடத்திச் சென்றதாக அடையாளம் காட்டி இருக்கிறார் ருபையா. இதையடுத்து, மேற்படி வழக்கை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என உத்தரவிட்டனர்.


Share it if you like it