ஜம்மு காஷ்மீரில் பாதூகாப்புப் படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரின் துணையோடு தீவிரவாதிகள் சுதந்திரமாக உலா வந்தனர். இவர்கள், காஷ்மீர் மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, நம் பாரத தேசத்திலும் சில தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், நம் பாரத தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதையடுத்து, அம்மாநிலத்துக்கான சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
இதன் பிறகு, அங்கு தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்கும் வகையில், மாநில புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினரோடு சேர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பள்ளத்தாக்குகளில் தீவிரவாதிகள் பதுங்கிக் கொள்வதால், அவர்களை வேட்டையாடுவது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பெரும் சாவலாக இருக்கிறது. எனினும், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, தீவிரவாதிகளை என்கவுன்ட்டர் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், ஹந்த்வாராவின் ராஜ்வர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதலில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேபோல, புல்வாமா மாவட்டம் செவகலன் பகுதியில் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். மேலும், கந்தர்பல் பகுதியில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஜம்மு காஷ்மீரில் முகாமிட்டிருக்கும் இந்திய வடக்குப் பகுதியின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தேவேந்திர பிரதாப் பாண்டே ஆகியோர் நேற்று ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் பாதுகாப்புப் படையினரை சந்தித்து, தீவிரவாதிகள் என்கவுன்ட்டர் பற்றி விசாரித்தனர். மேலும், உள்ளூர் மக்களிடமும் தற்போதைய காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கிறது என்கிற விவரத்தையும் கேட்டறிந்தனர்.