ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்திருக்கிறார்கள். அதாவது, கடந்த 21-ம் தேதி, ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியிலுள்ள ஜங்கார் பிரிவில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள மின்வேலிகளை துண்டித்துவிட்டு, 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக்கண்ட இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், அதிர்ச்சியடைந்த பயங்கரவாதிகள், மீண்டும் பாகிஸ்தான் பக்கமே திரும்பி ஓட்டம் பிடித்தனர். ஆனால், இந்திய வீரர்கள் சுட்ட குண்டு தபாரக் உசைன் என்கிற பயங்கரவாதியின் கால் மற்றும் தோல்பட்டை பகுதியை பாய்ந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவனை பிடித்து, மருத்துவ சிகிச்சை அளித்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, கடந்த 22-ம் தேதி நள்ளிரவு நேரத்தில், அதே ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர் பகுதியிலுள்ள புகார்னி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஆனால், எல்லையைக் கடக்க 150 மீட்டர் தூரமே இருந்த நிலையில், அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி இரு பயங்கரவாதிகளும் உடல் சிதறி பலியானார்கள். மேலும், கடந்த 23-ம் தேதி, சம்பா பகுதியில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் ஒருவன் ஊடுருவ முயன்றான். இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவன், மீண்டும் பாகிஸ்தான் பக்கமே ஓட்டம் பிடித்தான். சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டபோது, 8 பைகளில் 8 கிலோ போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளுக்காக இந்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டர் பகுதியில் மடியான் நானக் போஸ்ட் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக 3 பயங்கரவாதிகள் கடந்த 24-ம் தேதி மதியம் ஊடுருவி இருக்கிறார்கள். இது குறித்த தகவல், ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே, ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படை வீரர்களும் பயங்கரவாதிகளை கண்டறிய பதுங்கி இருந்தனர். 25-ம் தேதி காலை 8.45 மணியளவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. இதில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பிறகு, 3 பயங்கரவாதிகளின் உடல்களை மீட்ட பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களிடமிருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஒரு சீன எம்-16 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.