ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய நிகழ்வுகள் மூலம் நிரூபணமாகி வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜம்மு காஷ்மீர் என்றாலே இந்தியர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குலை நடுங்கும். அந்தளவுக்கு கலவர பூமியாக இருந்தது. சுற்றுலாத் தலங்களின் சொர்க்க பூமியான ஜம்மு காஷ்மீர், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரின் உறுதுணையால் தீவிரவாதிகளின் புகழிடமாக இருந்தது. இதனால், இங்கு சுற்றுலா செல்லவே பயணிகள் அச்சப்பட்டனர். எப்போது எங்கு குண்டு வெடிக்கும், எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்பதை தெரியாது. ஆகவே, அது ஒரு சுற்றுலாப் பயணமாக இல்லாமல் திகில் பயணமாகவே இருக்கும். இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் செல்வதையே தவிர்த்தனர்.
இந்த நிலையில், 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாதிகளின் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், பதான்கோட் தாக்குதல், யூரி தாக்குதல் என இந்தியா மீது பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, புல்வாமா என்கிற இடத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதுதான் மிகப்பெரிய தாக்குதலாகும்.
இதையடுத்து, தீவிரவாதிகளின் கொட்டத்தை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில், அதே ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு, லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதன் பிறகு, தீவிரவாதிகள் முற்றுலுமாக ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் அமைதி திரும்பி வருகிறது. மேலும், அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காண முடிகிறது.
அந்த வகையில், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி வேண்டாம் தீவிரவாதம் என்று விளக்கேற்றி, தீவிரவாதத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அதேபோல, தற்போது புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தினமான இன்று (பிப்.14-ம் தேதி) தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம், தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கின்றனர். இந்த மாற்றம், முன்னேற்றம் தொடர்ந்தால், ஜம்மு காஷ்மீர் விரைவில் உலக சுற்றுலாத் தலங்களின் முன்னோடியாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.