ஜெயராமன் முதலியார்
சுதந்திரப் போராட்டத் தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் ஊசூர் பகுதியில், 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே, ஐ.என்.ஏ. எனும் இந்திய தேசிய ராணுவப் படையில், ராக்கெட் பாராசூட் பிரிவில், சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர், என்பது குறிப்பிடத் தக்கது.
தனது 13 வயதில், அணைக்கட்டு பகுதியில், மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார். அந்த நேரத்தில் அப்பகுதியில், தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, காந்தி பற்றிய பாடல்களைப் பாடி, ஜெயராமன் முதலியாருக்கு கற்றுக் கொடுத்தனர்.
அந்த பாடல்களை விரும்பி கற்றுக் கொண்ட ஜெயராமன் முதலியார், தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில், இந்த பாடலை பாடினார். ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால், அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர். அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில், அடிக்கு அடி கொடுத்து விட்டு, அந்த ஊரை விட்டே சென்று விட்டார்.
எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார், சில மாதங்களுக்குப் பிறகு, ஹிட்லரின் ஜெர்மன் படையில் பணியாற்றுவதாக தகவல் கிடைத்தது. அந்த சமயத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஹிட்லரிடம் உதவி கேட்டார். ‘இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உங்கள் படையில் உள்ள இந்திய சிப்பாய்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று கேட்க, அதனை ஏற்ற ஹிட்லர் சுமார் முப்பதாயிரம் வீரர்களை, இந்திய விடுதலைக்காக அனுப்பி வைத்தார்.
அந்த வீரர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக போராட வந்தனர். அதில் ஒருவர் தான் ஜெயராமன் முதலியார்.
“சரியான உணவு உறக்கம் கிடையாது; எந்த வகையிலும் வருமானம் கிடையாது; உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது; இதனை எல்லாம் மனப்பூர்வமாக ஏற்று இரத்தத்தில் கையெழுத்திட்டு, நாட்டை காக்க வாருங்கள்!” என்ற அழைப்பை ஏற்று, அதன்படியே வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில், ராக்கெட் பாராசூட் பிரிவில், சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் மாவீரர் ஜெயராமன் முதலியார்.
சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி தலைமையில் ராணுவத்தில் பணியாற்றிய போது, ஜான்சி ராணி படைப்பிரிவு பெண்களுக்கு அடர்ந்த காட்டுப் பகுதியில், போர் பயிற்சி கொடுக்கும் தருவாயில், வெள்ளையர்கள் அதனை தடுக்கும் முயற்சியில் முயன்ற போது,
வெள்ளையர்களை எதிர்த்து துப்பாக்கி சண்டை நடைபெற்ற வேளையில், அவர் வலது பக்க தொடையில் ஒரு பக்கம் குண்டு பாய்ந்து, மறுபக்கம் வெளியே வந்த நிலையில் கடுமையாக பாதிக்கப் பட்டார். அதன் தழும்பு அவர் இறக்கும் வரையில், அப்படியே இருந்தது.
அதேபோல் நேதாஜி படை தோல்வியுற்ற நிலையில், அவர் பணி புரிந்த ராணுவ டிப்போ அலுவலகத்திலிருந்து, அவர் வீட்டிற்கு, அவர் இறந்து விட்டதாக தந்தியின் மூலம் தகவல் வரப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்நாளில் மண்பானைகளை அடுக்கி வைத்து காரியம் என்ற சடங்கு, நடைபெற்ற நாளில் இவர் உயிரோடு.
பசியும் பட்டணியுமாக உடல்வலிமையுற்று… உடல் ரீதியாக மனரீதியாக.. பாதிக்கப்பட்ட நிலையில்.. தாடியோடு அடையாளம் தெரியாத நிலையில் ஊருக்கு வீட்டில் வந்த நிலையில்.. வீட்டில் யாருக்கு காரியம் என்று வினவிய போது, இவர் மகன் ராணுவத்தில் இறந்து விட்டார் என்ற தந்தி வழி செய்தியின் அடிப்படையில் அவருக்கு காரிய சடங்குகள் நடைபெறுவதாக கூறிய போதும் இவர்….. நான் உயிரோடு இருக்கும் போது எனக்கு காரியம் செய்கிறீர்களா? என்று ராணுவ உடையோடு வந்த பூட்ஸ் கால்களால், அந்த மண்பானைகளை உடைத்த நிகழ்ச்சியும், இவரது வாழ்க்கையில் நடந்தது.
மாண்புமிகு குடியரசுத்தலைவராக, ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் இருந்த பதவிக் காலத்தில், தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க சுதந்திர போராட்ட வீரர்களை நேரில் அழைத்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் பணியாற்றிய ஆவண சிறப்புக்களை கண்டு, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள் “வெள்ளையனே வெளியேறு” நிகழ்ச்சியின் போது, அரசு அளவில் டெல்லி குடியரசு மாளிகைக்கு, நேரில் வரவழைத்து கௌரவபடுத்த பட்டார்.
சுதந்திரம் பெற வேண்டி, சுமார் 8 ஆண்டுகள் குடும்பத்தினரை பிரிந்து இருந்தார், ஜெயராமன் முதலியார். சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்தவர், 2007ம் வருடம் டிசம்பர் 8ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.