கோடிகணக்கான கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான ஏசு குறித்து சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், கூறும் கம்பி கட்டும் கதைகளை உண்மையென நம்பி புதிய தம்பிகளும், தங்கைகளும் இவரது கட்சியில் இணைவது வழக்கம். அதே வேளையில், சீமானின் உண்மையான சுயரூபத்தை புரிந்து கொண்டு பலர் அக்கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3,000 பேர் அண்மையில் தி.மு.க.வில் இணைந்தனர். மங்காத்தா ஆட்டம் ஆடுவது போல உள்ளே, வெளியே என அக்கட்சி தொண்டர்கள் கட்சி மாறுவது தொடர்கதையாக இன்று வரை இருந்து வருகிறது.
இதுதவிர, சீமான் கூறும் கதைகளை கேட்க தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. எனினும், கட்சியில் இணைந்த புதிய தம்பிகள் மற்றும் தங்கைகள் மாற்று கட்சிகளுக்கு ஓடிவிட கூடாது என்பதற்காக தினம் தினம் ஏதேனும் ஒரு கதையை கூறுவது இவரது வழக்கம். அந்தவகையில், தமிழகத்தில் அண்மையில் சக்கைபோடு போட்ட திரைப்படம் கே.ஜி.எப். இத்திரைப்படம் என்னை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறியிருந்தார். சீமானின் இந்த கருத்தை நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் என்னும் பழமொழிக்கு ஏற்ப, இவர் கூறும் பொய்க் கதைகளை அறிவார்ந்த தமிழக மக்கள் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதே நிதர்சனம். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் எல்லை குறித்து சீமான் சொன்ன கப்ஸா கதையை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில், கோடிகணக்கான கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான ஏசு குறித்து சீமான் கூறியதாவது ; இயேசு கிறிஸ்தவர் அல்ல பிறப்பில் இருந்து இறப்பு வரை அவர் ஒரு யூதர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பால் என்பவர் இயேசு எப்படி கொல்லப்பட்டார் என்கிற பரிதாபத்தை பரப்பினார். அது ஒரு மதமாக உருவெடுக்கிறது. அந்த பால் கொல்லப்படுகிறார். இதையடுத்து, இரண்டாம் ஜான் பால் வருகிறார். அவரும் கொல்லப்படுகிறார். இந்த பரிதாப நிலை மக்களிடத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தி அது பெரிய மதமாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து, ஏசுவை கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் அழைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். நான் வரலாற்றை தான் சொல்கிறேன் என சீமான் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீமானின் இந்த கருத்திற்கு கிறிஸ்தவர்களும், நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.