காரில் கட்டுக்கட்டாக கரன்ஸி: காங். எம்.எல்.ஏ.க்கள் கைது!

காரில் கட்டுக்கட்டாக கரன்ஸி: காங். எம்.எல்.ஏ.க்கள் கைது!

Share it if you like it

காரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டுவந்த ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மேற்குவங்க போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்காரி ஆகியோர், நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். இவர்கள் கட்டுக்கட்டாக பணத்துடன் வருவதாக மேற்குவங்க மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஹவுரா மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தினர். அப்போது, ராணிஹடி என்ற பகுதியில் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ. என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்தது. அக்காரை ரோந்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். எதிர்பார்த்தபடியே அக்காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இருந்தனர். இதைத் தொடர்ந்து, காரின் பின்புறப் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, பின் இருக்கைக்கு பின்புறம் கட்டுக்கட்டாக ஏராளமான பணம் இருந்தது.

இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகியோர் உட்பட காரில் பயணம் செய்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, மேற்படி பணம் எப்படி வந்தது, யாரிடமிருந்து பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை. எனவே, பணத்தை எண்ணும் பணிகள் நடந்து வருகிறது.


Share it if you like it