டவாலியை அழைத்து தனது ஷூவை தூக்கிச் சென்று காரில் வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்ட நிலையில், டவாலியும் ஷூவை கையால் தூக்கிச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல, திருநங்கைகளின் அழகிப் போட்டியும் நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டுக்கான கூவாகம் சித்திரை திருவிழா வரும் 18-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மே மாதம் 2-ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து, இத்திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷர்வன்குமார் ஜடாவத் நேற்று வருகை தந்தார். அங்கு, கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய முயன்ற அவர், ஷூவை கழட்டி, டவாலியை அழைத்து எடுத்துச் சென்று காரில் வைக்குமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, டவாலியும் கலெக்டரின் ஷூவை பவ்வியமாக கையால் எடுத்துச் சென்றார். இச்சம்பவம் கலெக்டருடன் சென்றவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், இதன் வீடியோ காட்சிகளையும் யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் இச்செயலுக்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.