திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கி இருக்கிறது ‘கள்ளன்’ திரைப்படம். தங்களது ஜாதியை இழிவுபடுத்துவதுபோல தலைப்பு இருப்பதாகக் கூறி போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒரு பிரிவினரான கள்ளர் சமுதாயத்தினர்.
பொதுவாகவே, ஜாதி, மதங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. அந்த வகையில், முன்பெல்லாம் படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். காரணம், குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பது அப்போதுதான் தெரியவரும். உடனே, அந்த குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள். இதன் பிறகு அந்தக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு திரையிடப்பட்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆனால், தற்போதைய திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. காரணம், ரசிகர்களை கவர்வதற்காக போஸ்டர், டீசர், ட்ரெய்லர், மோஷன் பிக்சர் என படம் திரையிடுவதற்கு முன்பே பல காட்சிகள் வெளியிடப்பட்டு விடுகின்றன.
எனவே, இவற்றைப் பார்த்துவிட்டு, எந்த சமுதாயத்தைப் பற்றி கதைக்களத்தில் சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதோ, அந்த சமுதாயத்தினர் போர்க்கொடி தூக்கத் தொடங்கி விடுகின்றனர். இதன் பிறகு, சிலர் சம்பந்தப்பட்ட சர்ச்சையான காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட்டு வருகிறார்கள். சிலரோ வருவது வரட்டும் பார்க்கலாம் என்று சம்பந்தப்பட்ட காட்சிகளை கட் பண்ணாமல் வீம்புக்கு வெளியிடுவதும் வழக்கம். இதனால், அச்சமுதாயத்தினர் கோர்ட் வரை சென்று படத்துக்கு தடை கோருவதும், ஒரு சில சமுதாயத்தினர் படத்தை தியேட்டரில் திரையிட விடாமல் செய்து, அப்படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதும் உண்டு. இதற்கு உச்ச நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களும் விதிவிலக்கு அல்ல.
உதாரணமாக, ரஜினி நடித்த பாபா படத்தில் புகை பிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெறக் கூடாது என்று பா.ம.க. கட்சியினர் எச்சரிக்கை விடுத்தும், அக்காட்சிகளை எடிட் செய்யாமல் திரையிட்டார்கள். விளைவு, அப்படத்தை திரையிட விடாமல் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், பாபா படம் ஓடிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்படம் படுதோல்வியை சந்தித்து படக்குழுவினரையும் நஷ்டத்துக்கு உள்ளாக்கியது. அதேபோல, நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில், வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாக ஆவேசமானார்கள். ஆனால், அப்படம் ஓ.டி.டி.யில் வெளியானதால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும், தங்களது சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக சூர்யா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், சூர்யா மன்னிப்புக் கோரவில்லை. எனவே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட விடாமல் செய்தனர். மேலும், மீறி படம் வெளியான தியேட்டர்களில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களும், சினிமா பிரியர்களும் தியேட்டருக்கு செல்வதை தவிர்த்தனர். இதன் காரணமாக அப்படம் தோல்வியை தழுவி, படக்குழுவினரையும் நஷ்டத்தில் தள்ளியது. அந்த வகையில்தான், தற்போது கள்ளன் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே, தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான கள்ளர் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.
பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கள்ளன்’. இப்படத்தை பெண் இயக்குனரான சந்திரா தங்கராஜ் இயக்கி இருக்கிறார். 7 திருடர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, திருடர்களுக்கு கள்ளன் என்கிற எங்களது சமுதாயத்தின் பெயரை வைத்து இழிவுபடுத்துவதா என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் கள்ளர் சமுதாயத்தினர். அதாவது, படத்தின் தலைப்பை மாற்றாமல் இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச் சங்கத் தலைவர் வசந்த் காடவராயர் தலைமையில், அச்சமுதாயத்தினர் திரளாகச் சென்று சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மனுவில், கள்ளன் திரைப்படத்தின் தலைப்பு, எங்களது சமுதாயத்தை இழிவுபடுத்துவது போல இருக்கிறது. இதனால், ஜாதி மோதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, தலைப்பை மாற்றி படத்தை திரையிட வேண்டும். அதேசமயம், அதே தலைப்பில் படம் திரைக்கு வரும்பட்சத்தில் அப்படத்தை சிவகங்கை மாவட்டத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். மீறி படம் திரையிடப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இதேபோல இதர மாவட்டங்களிலும் மனு கொடுக்க கள்ளர் சமுதாய மக்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கள்ளன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி கள்ளர் சமுதாயத்தினர் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தவிர, மதுரை மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கிறது.
இதனால், மார்ச் 18-ம் தேதி ரிலீஸாக வேண்டிய கள்ளன் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படத்தின் இயக்குனர் சந்திரா பெரியாரிஸ்ட் என்று கூறப்படுகிறது. ஆகவே, திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், இப்படத்தை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. எனவே, இப்படம் தலைப்பை மாற்றாமல் தடையைத் தாண்டி திரைக்கு வருமா அல்லது தலைப்பு மாற்றப்பட்டு திரைக்கு வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.