சா. கணேசன்
(ஜூன் 6, 1908 – ஜூலை 28, 1982)
சாமிநாத கணேசன் தமிழக அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாதி; கம்பரின் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்கள் உருவாக வழிகாட்டியவர், சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் வாழ்ந்த சாமிநாதன் – நாச்சியம்மை இணையருக்கு பிறந்த சா. கணேசன், தனது தொட்டக்கக் கல்வியை காரைக்குடி ரெங்க வாத்தியார் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளியில் பயின்றார். பண்டித வித்வான் சிதம்பர ஐயர், பண்டித சேதுப் பிள்ளையிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்னர் சமஸ்கிருத மொழியும், ஆங்கிலமும் கற்றார்.
1927 ஆம் ஆண்டு, காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்த போது, இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, காந்தியடிகளுக்கு பணி விடை செய்யும் தொண்டர் படையின் தலைவர் ஆனார்.
1936 ஆம் ஆண்டு, முதல் இந்திய விடுதலைப் போரில், தீவிரமாகப் பங்கேற்றார். 1941 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அச்சத்தியாக்கிரகத்தின் ஒரு பகுதியாக, தில்லியை நோக்கி காரைக்குடியில் இருந்து, நடை பயணத்தை மேற்கொண்டார். 66 நாள்களில், 586 மைல்களைக் கடந்து, உத்திரப் பிரதேசத்தில் உள்ள அலிப்பூரை அடைந்த போது, கைது செய்யப் பட்டு, அங்கு உள்ள சிறையில் அடைக்கப் பட்டார்.
செட்டி நாட்டுப் பகுதியில், 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை வீறோடு, சா. கணேசன் நடத்தினார். மாறு வேடத்தில் ஊர் ஊராகச் சென்று, மக்களை அப்போராட்டத்தில் ஈடுபடும் படி தூண்டினார். இதனால், அன்றைய ஆங்கிலேயே அரசு, இவரை கண்டதும் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இவருடைய வீடு, அரசால் சூறையாடப் பட்டது.
இதனால், தன் அரசியல் வழிகாட்டியான, இராஜ கோபாலாச்சாரியாரின் அறிவுரையை ஏற்று, சென்னை காவல் ஆணையரிடம், சரணடைந்தார். 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டு, அலிப்பூர் சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராஜகோபாலாச்சாரியார், தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் “சுதந்திராக் கட்சி” என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன், அந்தக் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார்.
இக்கட்சியின் சார்பில், 1962 ஆம் ஆண்டு தேர்தலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு, 1967 வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை, தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
கம்பனின் தமிழ்த் திறத்தைப் போற்றும் நோக்கில், காரைக்குடியில், 1939 ஏப்ரல் 2-3 ஆகிய நாள்களில், கம்பன் கழகத்தைத் தோற்றுவித்து, கம்பன் திருநாள் கொண்டாடினார். அதன் பின்னர் ஆண்டு தோறும், கம்பன் இராமயாணத்தை அரங்கேற்றிய நாளில், “கம்பன் விழாக் கொண்டாட” ஏற்பாடு செய்தார். இதற்காக 1968 ஆம் ஆண்டில், கம்பன் மணி மண்டபத்தை காரைக்குடியில் கட்டினார்.
கம்பராமயாண ஏட்டுப் பிரதிகள் பலவற்றைத் திரட்டி, தமிழறிஞர்களின் உதவியோடு, அவற்றையும் பிற பதிப்புகளையும் ஒப்பிட்டு, ஒன்பது தொகுதிகளாக வெளியிட்டார்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, 1968 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற போது, தமிழ்ப் பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் வெளிப்படுத்தும் கண்காட்சி, சா. கணேசனின் தலைமையில் அமைக்கப் பட்டது. அந்தக் கண்காட்சிக்கான கையேடு என்னும் நூலையும், அவர் உருவாக்கினார்.
1975 ஆம் ஆண்டில், காரைக்குடியில் தமிழ்த் தாய் கோயிலைக் கட்டினார். அறுகோண வடிவிலான அக்கோவிலில் தமிழ்த்தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஆகியோருக்கு சிலைகளை நிறுவினார்.
கம்பனடிப் பொடி சா. கணேசன், 1982 ஜூலை 28 ஆம் நாள், காரைக்குடியில் இறைவனடி சேர்ந்தார்.