அமைச்சர்கள் லேட்: கருத்துக் கேட்பு கூட்டம் புறக்கணிப்பு!

அமைச்சர்கள் லேட்: கருத்துக் கேட்பு கூட்டம் புறக்கணிப்பு!

Share it if you like it

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் காலதாமதமாக வந்ததால் கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்து விட்டுச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்திருப்பதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் நடந்துவந்த நிலையில், கடந்த 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங். இதையடுத்து, 20,000 கோடி ரூபாயில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக, பரந்தூர், ஏகநாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு உட்பட 12 கிராமங்களில் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில், குடியிருப்புகள், விவசாய நிலங்களும் அடக்கம். ஆனால், இதற்கு பரந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Parandur Airport, Parandur Airport: கருத்து கேட்பு கூட்டத்திற்கு தாமதமாக  வந்த அமைச்சர்கள்; வாழ்வாதாரம் பாதிக்கும் என மக்கள் எதிர்ப்பு! - villagers  and farmers around ...

இதையடுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆகஸ்ட் 16-ம் தேதி கிராம மக்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களும் நேற்று காலை 9 மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த காத்திருந்தனர். ஆனால், மதியம் 12 மணி வரை அமைச்சர்களோ, அதிகாரிகளோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கருத்துக் கேட்புக் கூட்டத்தை புறக்கணித்து விட்டுச் சென்று விட்டனர். பின்னர், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன் ஆகியோர் சாவகாசமாக வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் பிறகு, அங்கிருந்த ஒரு சிலரை வைத்து பெயரளவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி, வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, எழிலரசன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து விட்டதால், கிராமம் வாரியாக கருத்துக் கேட்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it