ஹிந்து மத தொடர்பும், ‘காந்தாரா, பொன்னியின் செல்வன்’ வெற்றியும்: கங்கனா ரணாவத் பளிச்!

ஹிந்து மத தொடர்பும், ‘காந்தாரா, பொன்னியின் செல்வன்’ வெற்றியும்: கங்கனா ரணாவத் பளிச்!

Share it if you like it

சமீபத்தில் வெளியான ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு ஹிந்து மத தொடர்புதான் காரணம் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘தலைவி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஹிந்து மதத்துக்கு ஆதரவாக இவர் அடிக்கடி கருத்துக்களை வெளியிடுவார். இதனால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவார். இந்த சூழலில்தான், சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும் காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களைப் பற்றி ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார் கங்கனா ரணாவத். வழக்கம்போல இந்த கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

இது தொடர்பாக கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில், “தென்னிந்திய திரைப்படங்களான ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களுடன் ஒப்பிடும்போது, பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை. தற்போது, வெற்றியடையும் படங்கள் அனைத்தும் இந்தியத் தன்மை உடையவை. நாம் ‘காந்தாரா’ படத்தை எடுத்துக்கொண்டால், அது ஒரு நுண்ணிய அளவில் பக்தி, ஆன்மிகத்துடன் தொடர்புடையது. ‘பொன்னியின் செல்வன்’ சோழர்களை பற்றியது. பார்வையாளர்கள் ஹிந்து மதத் தன்மைகளையும், மதிப்புகளையும் ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் தொடர்புபடுத்திக் கொண்டார்கள்.

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால், பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் பாலிவுட் படங்களில் இருக்கிறது. மக்கள் இனி அவர்களுடன் தொடர்புகொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்றவரிடம், ‘பாலிவுட்டில் நெப்போடிசம் குறைந்துள்ளதா?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, ”நெருங்கிய அமைப்பாக இருப்பதால் நெப்போட்டிசம் குறையவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள். ‘இனி இது வேலைக்கு ஆகாது’ என பொதுமக்களுக்கு சொல்கிறார்கள். இனியும் இந்த நடிகர்களை ரோல்மாடல்களாக முன்னிறுத்த தேவையில்லை என்று சாமானிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாம் ஏன் ஸ்ரீராமரையோ, ஏ.பி.ஜெ.அப்துல்கலாமையோ முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கருதுகிறார்கள்” என்றார்.


Share it if you like it