வ.உ.சி.யை பற்றி நீங்க பேசலாமா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

வ.உ.சி.யை பற்றி நீங்க பேசலாமா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

Share it if you like it

வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றிய காணொளி தொகுப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர்களில் ஒருவரான கனிமொழி. ஆங்கிலத்தில் இருக்கும் இந்த பதிவு பற்றி அவர் ஹிந்தியில் சப் டைட்டில் கொடுத்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

ஹிந்தியே தெரியாது என்று சொன்ன கனிமொழி, ஹிந்தியில் சப் டைட்டில் கொடுத்திருப்பது வேடிக்கையான நிகழ்வுதான் என்றாலும், எதற்காக இப்படி செய்திருக்கிறார் என்று விசாரித்தால், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வ.உ.சி.யை பற்றிய வரலாறு தெரிய வேண்டும் என்பற்காகத்தானாம்.

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த திராவிட இயக்கத்தின் பிந்தொடரிகளான தற்போதைய தமிழக அரசை நடத்திவரும் கட்சியின் முக்கிய குடும்பத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி இப்படியொரு பதிவை வெளியிட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதேசமயம், இந்த ட்விட்டர் பதிவு பலவிதமான கருத்து மோதல்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று டெல்லியில் பேரணி நடைபெறுவது வழக்கம். அதில் ராணுவ வீரர்களின் சாகசங்கள், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அலங்கார ஊர்தியில் பங்கு பெற அனைத்து மாநிலங்களும் விண்ணப்பித்து, அலங்கார ஊர்தியின் மாதிரி வடிவத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த அலங்கார ஊர்தியின் நோக்கம், எண்ணம், முக்கியத்துவம் என்னவென்ற தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

அதில் சிறந்த மாநிலங்ளின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இதற்கு முன்னர் எத்தனை முறை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட குழு முடிவு செய்கிறது.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், சுதந்திர தினம் எது, குடியரசு தினம் எது என்ற வித்தியாசம் தெரியாத ஒரு கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் திடீரென்று தேசப்பற்று வந்திருக்கிறது. நான் இதை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூறவில்லை. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் ஒரு அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் ஜனவரி 26 சுதந்திர தினம் என்று குறிப்பிட்டிருந்தனர். இது பொதுமக்கள் இடையே மிகப் பெரிய சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் பொய்களை கட்டவிழ்த்து விட்டீர்கள். அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால், முள்ளை முள்ளால் எடுப்பது போல் நீங்களும் தேசபக்தர்கள் ஆகி விட்டீர்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், திடீரென்று உங்களுக்கு தேசபக்தி வந்து விட்டதா அல்லது வந்துவிட்டது போல் நடிக்கிறீர்களா என்பது தெரியவில்லை. எனினும், நீங்கள் மறந்துபோன சில விஷயங்களை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வா.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் தேசியம் மற்றும் தெய்வீகத்தை தனது இரு முக்கியக் கொள்கைகளாகக் கருதி செயல்பட்டு வாழ்ந்து மறைந்தவர். இதே கொள்கையைத்தான் பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. அந்தக் கொள்கையைத்தான் நீங்கள் இந்துத்துவா கொள்கை என்று குற்றம்சாட்டி வருகிறீர்கள்.

அனைத்து ஹிந்து சமுதாய மக்களும் தங்களது வீடுகளில் தனியாக கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதிக்குக் கொண்டு வந்து ஹிந்து ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தின் அடையாளமாக மாற்றிய பாலகங்காதர திலகரின் மிகப்பெரிய பற்றாளர் வா.உ.சிதம்பரம் பிள்ளை. இதையேதான் தமிழகத்தில் ஹிந்து முன்னணி செய்து வருகிறது. இதைத்தான் திராவிடக் கட்சிகள் ஹிந்து தீவிரவாதம் என்று விமர்சனம் செய்து வருகிறீர்கள்.

திராவிட இயக்கத்தினரின் மாபெரும் எதிரியாக கருதப்பட்டு வரும் வீரசாவர்க்கரின் ‘அபிநவ் பாரத்’ என்ற அமைப்பில் அங்கம் வகித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜாதி ஏற்றதாழ்வற்ற ஹிந்து சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிற வீரசாவர்க்கரின் கனவை நிறைவேற்றத்தான் தற்போது விசுவ ஹிந்து பரிசத் அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆனால், இதைத்தான் திராவிட இயக்கங்கள் சிறுபான்யினருக்கு எதிரான கொள்கை என்று வசைபாடுகிறீர்கள்.

அதுமட்டுமின்றி, இந்தியா சுந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உங்கள் தாடித் தலைவரின் கொள்கைக்கு முற்றிலும் மாறாக, உயிரை மாய்த்தாவது தாய் மண்ணிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவேன் என்று வாழ்ந்து மறைந்த மாமனிதர் வா.உ.சிதம்பரம் பிள்ளை.

2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர்தான் தமிழகத்தின் மாமனார் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை மஸ்கான் துறைமுகத்தில் வைத்து கௌரவப் படுத்தியது, ராணி வேலு நாச்சியார் என்ற பெயரில் ரயில் சேவையை துவங்கியது, சுப்பிரமணிய பாரதியாருக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கை, ஒவ்வொரு முறையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலக மேடைகளில் பேசுகையில் தமிழின் தொன்மை மற்றும் திருக்குறள், தமிழ் வாசகங்கள் போன்ற விஷயங்களை பதிவு செய்வது வரை எண்ணற்ற தமிழ் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் இருக்கும் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களை, வீரர்களை திரும்பிக்கூட பார்க்காத திராவிட குடும்ப அரசியல் தலைவர்கள் தற்பொழுது விளம்பரத்திற்காக சுதந்திர போராட்ட வீரர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. ஆகவே, உங்கள் முதலை கண்ணீரை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.


Share it if you like it