மயக்க நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்த நிலையில், எதுவுமே தெரியாததுபோல நாடகமாடி துக்கம் விசாரித்த எட்வின் என்கிற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரைச் சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலித் தொழிலாளி. இத்தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன். இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் எட்வின். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இந்த சூழலில், மகள்கள் இருவருக்கும் திருமணமாகி, கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால், தம்பதி மட்டும் தங்களது வீட்டில் வசித்து வந்தனர். இதிலும், தினமும் கணவர் கூலி வேலைக்குச் சென்றுவிட, அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணிடம், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரியான எட்வின், பலமுறை சில்மிஷத்தில் ஈடுபட முயன்றிருக்கிறார். எட்வினை பலமுறை எச்சரித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த அப்பெண் இதுகுறித்து அவனது பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார். அவர்களும் எட்வினை கண்டித்திருக்கிறார்கள். ஆனாலும், இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத எட்வின், தொடர்ந்து அப்பெண்ணை நோட்டமிட்டு வந்திருக்கிறான். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நாள் கணவர் கூலி வேலைக்குச் சென்றுவிட, அப்பெண் உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்.
பின்னர், அசதியாக இருந்ததால் அப்பெண் வீட்டில் சற்று நேரம் கண் அயர்ந்திருக்கிறார். இந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த எட்வின், தூங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம் அத்துமீற முயன்றிருக்கிறான். திடுக்கிட்டு விழித்த அப்பெண், அதிர்ச்சியில் கூச்சலிட்டிருக்கிறார். இதனால் பயந்துபோன எட்வின், அப்பெண்ணை சரமாரியாக தாக்கி, கழுத்திலும் மிதித்திருக்கிறான். இதில் நிலைகுலைந்த அப்பெண், மயக்கமடைந்து கீழே சரிந்திருக்கிறார். எனினும், துளியும் கவலைப்படாத எட்வின், மயக்கநிலையில் வைத்தே அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
இதன் பிறகு, சுயநினைவில்லாமல் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, அப்படியே போட்டுவிட்டு தப்பியோடி இருக்கிறான் எட்வின். இதனிடையே, எதார்த்தமாக வீட்டுக்கு வந்த அப்பெண்ணின் உறவினர்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு அப்பெண், கோமா நிலைக்குச் சென்றுவிடவே, பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற போராடி இருக்கிறார்கள். ஆனாலும், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேசமயம், எதுவுமே தெரியாததுபோல எட்வினும், அப்பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனைக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாரளிக்கவும் சென்று நாடகமாடி இருக்கிறான்.
இது ஒருபுறம் இருக்க, அப்பெண் மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதே, அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, பக்கத்து வீட்டில் வசிக்கும் எட்வின், அப்பெண்ணிடம் பலமுறை அத்துமீற முயன்ற விவகாரம் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, எட்வினை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கவே, உண்மையை கக்கி விட்டான். இதைத் தொடர்ந்து, போலீஸார் எட்வினை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையும் தாண்டி, தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.