கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலை ஒட்டியுள்ள குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்த சிலைக்கு ஹிந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ராம நவமியன்று இச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான், இச்சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு மர்ம கும்பல் உள்ளே புகுந்து தலைப்பாகத்தை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதையடுத்து, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்பினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவலறிந்து போலீஸாரும் ஸ்பாட்டில் குவிக்கப்பட்டனர். பின்னர், உடைக்கப்பட்ட சிலையின் தலைப் பகுதியை போலீஸார் துணியால் மூடிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சிலையை உடைத்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலய தலைவர் நடராஜன் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கும் அதே நேரத்தில், அப்பகுதியில் பதட்டமான நிலை நிலவுவதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறு.