கவர்னருடன் விருந்து சாப்பிட்ட பொன்முடி: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கவர்னருடன் விருந்து சாப்பிட்ட பொன்முடி: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தமிழக சட்டமன்றத்தில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்தபோது, மிகவும் ஆவேசமாக கையை வீசி போய்யா என்று சொன்ன அமைச்சர் பொன்முடி, நேற்று நடந்த விருந்தில் கவர்னருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அமைச்சர் பொன்முடியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கவர்னர் மாளிகையில் நடந்த காசி தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பது பிரிவினையை தூண்டுவதுபோல இருப்பதால், அவ்வாறு அழைப்பது சரியாக இருக்காது. தமிழகம் என்று அழைத்தால்தான் ஒற்றுமையாக இருக்கும் என்று கூறினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர் கவர்னரை வசைபாடியதோடு, சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கினர்.

இந்த சூழலில், கவர்னர் தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு கொடுத்த கவர்னர் உரையில், தி.மு.க. அரசை புகழ்வது போன்ற வாசகங்களையும், திராவிட மாடல் ஆட்சி என்பன போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இவற்றை நீக்கும்படி கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் நீக்காததால், தனது உரையின்போது மேற்கண்ட வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆகவே, கவர்னர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். இது மரபு மீறிய செயல் என்பதால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர்.

அப்போது, கவர்னரை பார்த்து ஆவேசமாக போய்யா என்று கையை அசைத்து கூச்சலிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இந்த வீடியோவைப் பார்த்த நடுநிலைவாதிகள், அரசியல் விமர்சகர்கள் பொன்முடிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்த சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் கவர்னர் ரவி. இது தொடர்பான அழைப்பிதழில் தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இந்த விழாவை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான், அமைச்சர் பொன்முடி, கவர்னருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறார். இதுதான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த 22-ம் தேதி நடந்தது. இதில், வேந்தர் என்கிற முறையில் கவர்னர் ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் என்கிற முறையில் பொன்முடியும், லோக்கல் அமைச்சர் என்கிற வகையில் பெரியகருப்பனும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், மதியம் பல்கலைக்கழக விடுதியில் உணவருந்தினர். இதில்தான், கவர்னரோடு தி.மு.க. அமைச்சர்களும் கலந்துகொண்டு உணவருந்தி இருக்கிறார்கள்.

இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் பொன்முடியை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது, கவர்னர் அளித்த விருந்து சிறப்பா இருக்கா, கவர்னருடன் மோத தெம்பு வேணுமுல்ல என்பது உள்ளிட்ட பல்வேறு கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it