காரைக்குடியில் ஜாமீனில் வந்த இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரைச் சேர்ந்தவர் அறிவழகன் என்கிற வினித். 27 வயதான இவர், காரைக்குடியில் நடந்த ஒரு கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், காரைக்குடியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த வினித், தெற்கு காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை இருவேளையும் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.
வழக்கம்போல இன்று காலையும் தெற்கு காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் சென்றார். கையெழுத்து போட்டு விட்டு சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது, ஒரு கார் வேகமாக வந்து அவர் அருகே நின்றது. காரிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், வினித்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த போலீஸார், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வினித்தை மீட்டு, அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே வினித் இறந்து விட்டார்.
பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வினித்தை வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், முன்விரோதத்தில் இக்கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீஸா விசாரித்து வருகின்றனர்.