கர்நாடகாவில் மே 10-ல் சட்டமன்றத் தேர்தல்: ராகுல் தொகுதிக்கு இப்போது இல்லை… தேர்தல் ஆணையம்!

கர்நாடகாவில் மே 10-ல் சட்டமன்றத் தேர்தல்: ராகுல் தொகுதிக்கு இப்போது இல்லை… தேர்தல் ஆணையம்!

Share it if you like it

கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 1 மாத காலம் அவகாசம் இருப்பதால் இப்போதைக்கு தேர்தல் நடத்தும் முடிவில் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக மாநில அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை ஏப்ரல் 13-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20-ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும் என்றும், வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. எனவே, வயநாடு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், “கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் இருக்கிறது. மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 1 மாத காலம் அவகாசம் உள்ளது. ஆகவே, இடைத்தேர்தல் குறித்து அறிவிக்க அவசரம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it