கல்விக்கண் திறந்த காமராஜர் மக்களுக்கு செய்த சேவைகள் மற்றும் அவரின் எளிமையான வாழ்க்கை முறை குறித்து, கர்நாடக சட்டசபையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் பாராட்டி பேசி இருப்பது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட, குறைகூற முடியாத அளவிற்கு நேர்மையுடன் வாழ்ந்தவர் காமராஜர். தனது குடும்ப வளர்ச்சி குறித்து கவலைப்படாமல். தமிழக மக்களின் வாழ்க்கை குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் மட்டுமே சிந்தித்தவர். தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லாமல். ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளுக்கும் இன்றுவரை சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பெருந்தலைவர் என்று அன்போடு அழைக்கும் அளவிற்கு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். இவர், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர், தமிழக முதல்வராக இருந்த காலகட்டம் பொற்கால ஆட்சி என்றே கூற முடியும். அந்த அளவிற்கு நேர்மையான முறையில் ஆட்சியை நடத்தியவர். ஓட்டு அரசியலை கருத்தில் கொள்ளாமல். ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும், அவர்களின் பள்ளி படிப்புக்கு தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்.
மேலும், மின்சார உற்பத்தி, தடுப்பு அணைகள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், என பல வியத்தகு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். இப்படியாக, இவர் சாதனைகள் ஏராளம். மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்தார்.
இந்த நிலையில்தான், நேற்றைய தினம் கர்நாடக மாநில சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜீவ் என்பவர் கல்விகண் திறந்த காமராஜரின் மக்கள் சேவை குறித்து பேசியுள்ளார். அதேபோல, எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் காமராஜரின் புகழை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.