பா.ஜ.க. நிர்வாகி கொலை: கண்டித்து போராட்டம்!

பா.ஜ.க. நிர்வாகி கொலை: கண்டித்து போராட்டம்!

Share it if you like it

கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகா பகுதியான பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. பா.ஜ.க. இளைஞரணி மாவட்டச் செயலாளராக இருந்த இவர், சொந்தமாக கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அரிவாள், கத்தி, கோடாரி போன்ற கூரிய ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த பிரவீன் நெட்டாருவை, அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை வரவழைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலை தொடர்பாக 15 பேரை பிடித்து விசாரித்து வருவதாக கூறும் போலீஸ், கொலையாளிகள் கேரள பதிவு எண் கொண்ட பைக்குகளில் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே, கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் பா.ஜ.க.வினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர், பிரேதப் பரிசோதனை முடிந்து பிரவீன் நெட்டாருவின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

பா.ஜ.க.வினர் போராட்டத்தால், தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில் வன்முறை நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பிரவீன் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில், தட்சிண கன்னடா மாவட்டம் கெலஞ்சேவில் பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த ஓவியர் மசூத் என்பவர், கொலை செய்யப்பட்டார். ஆகவே, இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், பைக்குகள் கேரள பதிவெண்ணைக் கொண்டதாக இருப்பதால், கேரளாவில் இருந்து ஆட்களை வரவழைத்திருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர்.


Share it if you like it