கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைக்கு அவசரச் சட்டம்!

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைக்கு அவசரச் சட்டம்!

Share it if you like it

கர்நாடகாவில் மத மாற்றத்துக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்தும் வகையில், கர்நாடக அரசு நேற்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கான அவசரச் சட்டம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இறங்கினார். இதற்கு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் அமைப்புகளும், காங்கிரஸ், ம.ஜ.த. ஆகிய எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா டிசம்பர் 2021-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டமேலவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த சூழலில், மதமாற்றத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடியது. இந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்தவொரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவதில்லை. அதேசமயம், மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

அதேபோல, மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறினால், அவர்களின் அடிப்படை ஜாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில், அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். இச்சட்டத்தை மீறி கட்டாயமாக மதமாற்றம் செய்தால், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்க முடியும். மேலும், சிறுவர்கள், பெண்கள் அல்லது பட்டியலின மற்றும் பழங்குடியின நபர்களை மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். அதேபோல, வெகுஜன மதமாற்றத்திற்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த அவசரச் சட்டத்திற்கு பதிலளித்த கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி, “மதமாற்ற தடைச் சட்ட மசோதா கடந்தாண்டு டிசம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக இந்த மசோதாவை நாங்கள் சட்ட மேலவையில் தாக்கல் செய்யவில்லை. ஆகவே, தற்போது அமைச்சரவையில் விவாதித்து அவசர சட்டமாகக் கொண்டு வர ஒப்புதல் பெற்றுள்ளோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 213-வது பிரிவின்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், கவர்னர் தேவை கருதி அவசரச் சட்டத்தை அனுமதிக்க முடியும். எனவே, இதுகுறித்து அரசு அரசாணையை வெளியிட தீர்மானித்துள்ளது. இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் அடுத்த‌ 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை மற்றும் மேலவையில் ஒப்புதல் முடிவெடுத்துள்ளோம். இதை மதமாற்றத் தடைச் சட்டம் என்று அழைக்காமல், மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு மசோதா என்று கூறுவோம். திருத்தங்கள் ஏதுமின்றி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அனைத்தும் அவசரச் சட்டமாக கொண்டு வரப்படும்” என்றார்.


Share it if you like it