கர்நாடக சட்டசபை தேர்தல் – வெல்ல போவது யார் ?
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 2023 க்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் மே 13-ம் தேதி அறிவிக்கப்படும்.
மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகத்தில் தற்போது ஆளும் பாஜகவுக்கு 119 எம்எல்ஏக்கள் உள்ளனர், காங்கிரசுக்கு 75 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலுக்கு முன்னோடியாக கர்நாடக மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரவுள்ள தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் அரசியல் களத்தில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 1985ம் ஆண்டுக்கு பிறகு ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி செலுத்தியதில்லை. பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. அந்த வகையில் வரும் தேர்தலிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தேர்தலில் எந்தளவுக்கு எதிரொலிக்கும் என்பது இனி தான் தெரியவரும்.
இந்த இரு கட்சிகளுக்கு இடையே மதசார்பற்ற ஜனதா தளம் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
பாஜகவுக்கு உள்ள சவால்கள்
கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் ஆளும் பாஜக உறுதியாக உள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் 150 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடகத்தின் ஆளும் பாஜக அரசு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது.
அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அவர்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வைத்திருக்க முடிவு செய்தது.
இரண்டாவது முடிவு, இந்த 4 சதவீத ஒதுக்கீடு வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு, வொக்கலிகாவுக்கான ஒதுக்கீடு 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சமசாலி, வீரசைவர்கள் மற்றும் இதர லிங்காயத் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம் சமூகம் இனி பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறும்.
கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவு யாருக்கு கிடைத்தாலும் அந்த கட்சிக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் என நம்பப்படுகிறது. கர்நாடகாவின் மொத்த மக்கள்தொகையில் 14 சதவீதம் லிங்காயத்துகள் உள்ளனர். இது கிட்டத்தட்ட 110 சட்டமன்ற தொகுதிகளை நேரடியாக பாதிக்கிறது.
அதன் காரணமாக பாஜக லிங்காயத்துகளின் ஆதரவை பெறுவதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக அரசு எடுத்துள்ள முடிவு தேர்தல் வெற்றிக்கு பயன்படுமா என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.
அதேசமயம் கர்நாடக பாஜக அரசின் இடஒதுக்கீடு தொடர்பான இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என பரவலாக நம்பப்படுகிறது.
இதேப்போல் மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை, வகுப்புவாத பதற்றம், ஹிஜாப் விவகாரம், சாவர்க்கர் சர்ச்சை மற்றும் ஊழல் ஆகிய பிரச்சனைகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளும் தேர்தல் வெற்றியை பாதிக்கலாம்.
காங்கிரஸ் நம்பிக்கை
கர்நாடகத்தில் மீண்டும் தன் செல்வாக்கை உயர்த்த காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
அதற்கான முயற்சியாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவதாக வாக்களித்துள்ளது.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்தியுள்ளது. மேலும் அதன் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் பாஜகவுக்கு இன்னும் வலிமையான சவாலாக உள்ளது.
ஊழல், தவறான நிர்வாகம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு சந்தித்து வருவதால் காங்கிரஸ் கட்சி கடுமையான சவால் கொடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்க வழக்கை கர்நாடகாவில் பெரிய பிரச்னையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை தவிர்க்க காங்கிரஸ் பெரியளவில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.எனவே ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்கி மறுபுறம் மோடியை எதேச்சதிகாரியாக மக்கள் முன் காட்டலாம்.
கிங் மேக்கராகுமா ஜேடிஎஸ் ?
கர்நாடக தேர்தல் களத்தில் உள்ள மூன்றாவது பெரிய கட்சி முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி தலைமையிலான ஜே.டி.எஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம். இந்த கட்சி நடக்கவுள்ள தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போது நிலவும் சூழ்நிலையில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அந்த சமயத்தில் ஜே.டி.எஸ் யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடந்த 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்த ஜேடிஎஸ் பின்னர் 2019ம் ஆண்டு தன் எம்.எல்.ஏக்கள் சிலரின் ஆதரவை இழந்ததால் அதன் ஆட்சி கவிழ்ந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து பின்னர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனால் ஜேடி.எஸ் மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு நீடித்தது.
இருப்பினும் தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் சமமான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது. அதே நேரத்தில் தனது கோட்டையான பழைய மைசூர் பிராந்தியத்திற்கு அப்பால் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது. விவசாயிகள் நலன், பிராந்திய வளர்ச்சி மற்றும் சமூக நீதி போன்ற பிரச்சினைகளிலும் ஜேடி-எஸ் கவனம் செலுத்தி வருகிறது. அதனால் நடக்கபோகும் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கணிசமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடக்கபோகும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்து சாதனை படைக்குமா ? காங்கிரஸிடம் தோல்வியை சந்திக்குமா ? மதசார்பற்ற ஜனதா தளம் மீண்டும் கிங் மேக்கராக உருவாகுமா ? என்ற கேள்விகளுக்கு மே 13ம் தேதி விடை தெரிந்துவிடும்.