ஹிஜாப் தடையால் மோகினி ஆட்டத்துக்கு தடையா? கேரள இஸ்லாமிய நீதிபதி நடவடிக்கையால் சர்ச்சை!

ஹிஜாப் தடையால் மோகினி ஆட்டத்துக்கு தடையா? கேரள இஸ்லாமிய நீதிபதி நடவடிக்கையால் சர்ச்சை!

Share it if you like it

கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதால், கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய நீதிபதி, மோகினி ஆட்டத்தை பாதியில் தடுத்து நிறுத்தி இருப்பதாக சர்ச்சை வெடித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கலாம் பாஷா. இவரது வீடு பாலக்காடு அரசு மோயன் எல்.பி. பள்ளிக்கு அருகில் இருக்கிறது. இந்த நிலையில், அந்தப் பள்ளியின் மைதானத்தில், பிரபல மோகினியாட்ட நடனக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சித்தரிக்கும் ‘சக்யம்’ என்ற தலைப்பில் மேற்படி நிகழ்ச்சியை 1 மணி நேரம் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேகரிபுரம் கிராந்தசாலை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், ஸ்ரீசித்ரன் எம்.ஜே. எழுதிய ‘இதிஹாசங்களை தேடி’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, இரவு 8 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. திடீரென இரவு 8.30 மணியளவில் போலீஸாருக்கு போன் செய்த நீதிபதி கலாம் பாஷா, நீனா பிரசாத்தின் மோகினியாட்டம் நிகழ்ச்சி தனக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்நிகழ்ச்சியை நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீஸாரும் பள்ளி மைதானத்தை முற்றுகையிட்டு, நிகழ்ச்சியை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகினியாட்ட மூத்த கலைஞர் நீனா பிரசாத் மற்றும் அவரது குழுவினர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

இதுகுறித்து டாக்டர் நீனா பிரசாத் கூறுகையில், “இது எனது நடன வாழ்க்கையில் கசப்பான அனுபவம். 2 வருடங்களுக்கும் மேலாக தூக்கத்தைத் தொலைத்து, மிகவும் சிரமப்பட்டு பயிற்சி எடுத்து, மிகுந்த நம்பிக்கையுடன் மேடை ஏறினோம். ஆனால், இது பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது எனக்கு மட்டுமல்ல, சக கலைஞர்களுக்கும் மிகப்பெரிய அவமானகரமான அனுபவமாகும்” என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த புரோகமன கலா சாகித்ய சங்கம், இது நீதிபதியின் கலாசார சகிப்புத்தன்மை இன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியது. மேலும், இதுகுறித்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சங்கத்தின் தலைவர் ஷாஜி என் கருண் மற்றும் பொதுச் செயலாளர் அசோகன் சருவில் ஆகியோர், கலைஞர்கள் மற்றும் கலாசாரத்தை இழிவுபடுத்தும் தலைவர்களை மக்கள் எதிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். தவிர, அரசின் கலை மற்றும் கலாசாரத்தை அதிகார வர்க்கத்தினர் நசுக்கக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறது. அதோடு, கேரள மக்கள் எப்போதும் அதிகாரத்துவம் மற்றும் நீதிபதிகளைவிட கலைஞர்களுக்கு அதிக மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தருகிறார்கள். ஒரு கலைஞருக்கு (எம்.எஸ். சுப்புலட்சுமி) உயர்ந்த பதவியை வழங்கிய ஒரு பிரதமர் நமக்கு இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த நீதிபதி பாஷா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, தனது மனைவிக்கு “முத்தலாக்” மூலம் சட்டவிரோதமாக விவாகரத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரது மனைவி, கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி, மாவட்ட நீதிபதி கலாம் பாஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினார். இதனால், நீதிபதி கலாம் பாஷாவும், அவரது சகோதரரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கெமல் பாஷாவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் நீதிபதி கலாம் பாஷா, மோகினி ஆட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிய மாநில அரசு தடை விதித்து செல்லும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது அம்மாநில உயர் நீதிமன்றம். இந்த வெறுப்பு காரணமாகவே, ஹிந்துக்களின் பாரம்பரிய கலையான மோகினி ஆட்டத்தை, இஸ்லாமிய நீதிபதியான கலாம் பாஷா தடுத்து நிறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.


Share it if you like it