ஒரே மாதிரி சீருடை – அவசியமா?

ஒரே மாதிரி சீருடை – அவசியமா?

Share it if you like it

ஒரே மாதிரி சீருடைஅவசியமா?

அனைவரும் ஒரே மாதிரி, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், உருவாக்கப் பட்டதே சீருடை. ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயம் அமைய, “சீருடை” என்பது மிகவும் அவசியம்.

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், ஆட்டோ இயக்குபவர் என நேரடியாக மக்கள் பணியில் இருக்கும் அனைவருக்கும், சீருடை அவசியமாக்கப் பட்டு உள்ளது.

எந்த ஒரு இடத்திலும், வசதி அதிகம் உள்ளவர்களும் இருப்பார்கள், வசதி வாய்ப்பு குறைந்தவர்களும் இருப்பார்கள். வசதி மிகுந்தவர்கள், அதிக விலைக்கு உடை அணிந்து வந்தால், சாதாரண உடைகள் அணிந்து வந்தவர்களுடைய மனநிலை மாற வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே, எல்லோரும் ஒரே மாதிரி உடை அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, அது கடை பிடிக்கப் பட்டும் வருகின்றது.

மாணவமாணவியர்களுக்கு ஏற்படும் நன்மைகள் :

  • அனைவருமே ஒரே மாதிரி நிறத்தில் உடை அணிவதன் மூலமாக, தான் வசதி மிகுந்தோர் அல்லது வசதி குறைந்தோர் என்ற மனநிலை ஏற்படும் வாய்ப்புகள் இல்லாதுப் போகும்.
  • அனைவரும் ஒன்று என்ற மன நிலையை, இளம் வயதிலேயே மாணவ – மாணவியர்களுக்கு ஏற்படுத்தும்.
  • பள்ளிக்கென உள்ள குறிப்பிட்ட ஒரு சீருடையை அணிவதன் மூலமாக, இந்தப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் – மாணவியர்கள் என்ற உணர்வு, பார்ப்பவர் கண்களுக்கு இருக்கும்.
  • அனைவரும் ஒரே மாதிரி இருப்பதன் மூலமாக, “எல்லோரும் ஒன்று தான்” என்ற மனநிலையை, குழந்தைகளின் இளம் வயதிலேயே ஏற்படுத்தும்.
  • மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி குறையும்.

பொருளாதார ரீதியாக ஏற்படும் நன்மைகள் :

  • தனது வசதியை வெளி உலகிற்குத் தெரிவிக்க, சிலர் அதிக விலைக்கு, உடை வாங்கி அணிந்து வரலாம். சிலர் தங்களுடைய குடும்ப சூழலுக்கு ஏற்ப, உடை அணிந்தும் வரலாம். இதன் மூலமாக, மாணவ –  மாணவியர்களுக்கு இடையே, ஏற்றத் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் இருக்க, அனைவரும் ஒரே மாதிரி, சீருடை அணிவது மிகவும் அவசியம்.

மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் :

குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தினர்கள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, உடை அணிந்து வந்தால், மற்றவர்களின் உடையை, தங்களுடன் உடையுடன் ஒப்பிடும் சூழ்நிலை ஏற்படலாம். இதன் மூலமாக, மாணவ –  மாணவியர்களுக்கு இடையே மற்றும் பெற்றோர்களுக்கு இடையே, மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிவதன் மூலம், அத்தகைய மன அழுத்தங்கள் இல்லாமல் போகும்.

மாணவமாணவியர்களுக்கு பாதுகாப்பு :

ஒருவேளை  குழந்தை காணாமல் போனாலும் அல்லது வேறு எங்கேனும் பாதை மாறிச் சென்றாலும், சீருடை அணிவதன் மூலம், இந்தக் குழந்தை, இந்த பள்ளியில் தான் படிக்கிறது என்பதனை அறிந்து, அந்த பள்ளிக்கு, யாரேனும் கொண்டு சேர்த்து விடலாம். அதன் மூலம் அந்தக் குழந்தை, அதன் பெற்றோருடன் சேர்ந்து விடும் சூழல் உருவாகும்.

ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் :

இவற்றைப் போன்றே, சில அரசுப் பணிகளிலும், சில தனியார்  நிறுவனங்களிலும், ஆண்கள் – பெண் ஊழியர்கள் அனைவரும், தங்கள் பாலினத்திற்கு ஏற்ப, ஒரே மாதிரி சீருடை அணியும் வழக்கம் உள்ளது.

சீருடைக்கு எதிரான சமீபத்திய போராட்டம் :

அண்மையில் கர்நாடகாவில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புரா அரசுக் கல்லூரியில் சில மாணவிகள், தங்களது மத வழக்கப்படி, உடை அணிந்து வந்தது, பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஒரு பள்ளிக் கூட வகுப்பில் படிக்கும் அனைவரும், ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே, சீருடை அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் அதை கடைப் பிடிக்காமல், தங்களது மத சம்பிரதாயப் படி மட்டும் தான் நடப்போம் என மாணவிகள் கூறியது, வேடிக்கையாக உள்ளது. இதன் எதிரொலியாக, மற்ற மாணவர்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, சீருடைக்கு மேல் வேறு ஓன்றை அணிந்துக் கொண்டு வந்தனர். இதனால், இரு பிரிவினருக்கும் இடையே, பதட்டம் ஏற்பட்டது.

படிக்கும் மாணவர்கள், தங்களது படிப்பின் மேல் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களை, அணிவது குறித்து கவனம் செலுத்துவது, பார்ப்பவர்களுக்கு வினோதமாக இருந்தது.

சித்ரதுர்கா, சிவமொக்கா, குந்தாபுரா உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், தங்களது மதச் சம்பிரதாய உடையை அணிந்து வந்தனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு அந்த மாணவிகள், தங்களுக்கு படிப்பு வேண்டாம், மத உடையே வேண்டும் எனவும், படிப்பை விட, தங்களது உடையே முக்கியம் எனக் கூறியது, பலரையும் ஆச்சரியப் படுத்தியது.

படிக்க வேண்டிய மாணவிகள் மனதில், இது போன்ற எண்ணம் இருக்கலாமா? படிப்பு தான் அவசியம் என்ற எண்ணத்தை விட, மதச் சார்பு உடையே முக்கியம் எனக் கூறியது, வேதனையாக உள்ளது என, கல்வியாளர்கள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

மதச்சார்பற்ற நமது நாட்டில், ஓரு மதத்தின் பெயரால், ஒரு சமயத்தினர் மட்டும், இவ்வாறு உடை அணிந்து வருவதைக் கண்டு, மற்ற சமயத்தினரும், அது போல உடை அணிந்து தினமும் வந்தால், அதன் மூலமாக சமூகத்தில், பதட்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும், ஒரே மாதிரி சீருடை இருக்க வேண்டும் என்ற எண்ணமும், சிதைந்துப் போய், சீருடை என்பதே அவசியம் இல்லாதது போல் ஆகி விடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

உலக அளவில் பர்தா அணிய தடை செய்த நாடுகள்

சுவிட்சர்லாந்துமார்ச் மாதம், 2021 ஆம் ஆண்டு முதல், பொது இடங்களில், “பர்தா” அணிய தடை விதிக்கப் பட்டு உள்ளது.

பிரான்ஸ் – 2011 ஆம் ஆண்டு முதல், பொது இடங்களில் பர்தா அணிய தடை விதிக்கப் பட்டு உள்ளது.

சீனா – 2017 ஆம் ஆண்டு முதல், பொது வாகனங்களில் பயணம் செய்ய, பர்தா அணிந்த பெண்களுக்கும், தாடி வளர்க்கும் ஆண்களுக்கும் முற்றிலும் தடை செய்யப் பட்டு உள்ளது.

இலங்கை –  2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி முதல் அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி, முகத்தை மூடும் உடைக்கு, முற்றிலும் தடை செய்யப் பட்டு உள்ளது.

ஜெர்மனி – 2017 ஆம் ஆண்டு முதல், நீதிபதிகள், காவலர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு, முகத்தை மூடும் ஆடை தடை செய்யப் பட்டு உள்ளது.

ஆஸ்திரியா – 2017 ஆம் ஆண்டு முதல் முகத்தை, மூடும் உடைக்கு தடை செய்யப் பட்டு உள்ளது.

நார்வே – 2018 ஆம் ஆண்டு முதல், பள்ளிக் கூடத்திலும், பல்கலைக் கழகங்களிலும், முகத்தை மூடும் உடைக்கு, தடை செய்யப் பட்டு உள்ளது.

இன்னும் சில நாடுகளில், முகத்தை மூடுவது போன்ற உடையை பயன் படுத்துபவர்களுக்கு,  அபராதம் விதிக்கப் படுகிறது.

பல இஸ்லாமிய நாடுகளிலும், அது போல உடை அணிவது தடை செய்யப் பட்ட போதிலும், மதச் சார்பற்ற நமது நாட்டில், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய, அனைவருக்கும் உரிமை வழங்கப் பட்டு உள்ளது.

அதே சமயம், “சீருடை” என வரும் போது, அனைத்து மாணவ – மாணவியர்கள், இளம் வயது முதலே, எல்லோரையும் போல, ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

“கற்கை நன்றே.. கற்கை நன்றே…

பிச்சை புகினும்.. கற்கை நன்றே…” – ஔவையார்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://www.indiatvnews.com/news/india/karnataka-hijab-controversy-udupi-women-pre-university-college-muslim-girls-students-agitation-list-of-countries-banned-hijab-headscarf-burqa-2022-02-11-759072

Share it if you like it