கல்லூரி முதல்வரை, எம்.எல்.ஏ. ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது நல்வாடி கிருஷ்ணராஜ வெடியார் ஐ.டி.ஐ. கல்லூரி. புதுப்பிக்கப்பட்ட இக்கல்லூரியின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மண்டியா தொகுதியின் எம்.எல்.ஏ.வான தேவகவுடா மகன் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். அப்போது, எம்.எல்.ஏ.வை வரவேற்க கல்லூரி முதல்வர் நாகநாடால் வரவில்லையாம். கல்லூரிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ், கல்லூரி முதல்வரை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார்.
அதன்படி, சிலர் சென்று கல்லூரி முதல்வரிடம் தகவல் சொல்ல, அவரும் அவசர அவசரமாக வந்திருக்கிறார். அப்போது, கல்லூரி முதல்வரை பளார் பளார் என கன்னத்தில் 3 அறை விட்டார் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாஸ். இதனால், செய்வதறியாது திகைத்து நின்றார் கல்லூரி முதல்வர் நாகநாடால். இதைப் பார்த்து மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இது வைரலான நிலையில், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கல்லூரி ஊழியர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எம்.எல்.ஏ.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அரசு ஊழியர் சங்கத்தின் மாண்டியா மாவட்டத் தலைவர் ஷம்பு கவுடா தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கல்லூரி ஆய்வகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கல்லூரி முதல்வர் நாகநாடாலிடம் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசன் கேட்டதாகவும், அதற்கு சரியான பதில் தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., கல்லூரி முதல்வரை அறைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.