பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை தடை செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்திருக்கிறார்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அல்கொய்தா, அல் உம்மா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவது, இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து அழைத்து வந்து பயங்கரவாத பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ஆகவே, மேற்கண்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான சூஃபி முஸ்லீம்கள், பி.எஃப்.ஐ. பயங்கரவாத அமைப்பு என்றும், அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில், கடந்த 21-ம் தேதி நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 15 மாநிலங்களில், 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், வாக்கி டாக்கி, ஹவாலா பணப்பரிவர்த்தனை, ஆயுதங்கள் என ஏராளமானவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், 45 பேரை கைதும் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பினரிடம் விசாரணை நடத்தியதில், பீகார் மாநிலம் பாட்னாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் அம்பலமானது. தவிர, பயங்கரவாத செயல்களின் மூலம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி மேற்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பி.எஃப். அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், கர்நாடகாவில் பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறியிருக்கிறார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அரக ஞானேந்திரா, “கர்நாடகாவில் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சியினர் மக்களிடையே திட்டமிட்டு பிரிவினைவாதத்தை பரப்பி வருகின்றனர். பெங்களூரு கலவரம், ஹிஜாப் பிரச்னை ஆகியவற்றின் பின்னணியிலும் இவர்கள் இருந்தனர். தவிர, பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்து கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக புகார் வந்ததாலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனையை முன்னெடுத்தனர். இதன் மூலம் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. இந்த அமைப்புகளை கர்நாடகாவில் தடை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே, இரு கட்சிகளையும் தடை செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம்” என்றார்.