பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு: மைசூரில் பரபரப்பு!

பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு: மைசூரில் பரபரப்பு!

Share it if you like it

மைசூரில் பிரதமர் மோடி மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடி நேற்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பெங்களூருவில் சாலையில் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்த நிலையில், நேற்று 2 பொதுக்கூட்டங்களை முடித்துக் கொண்டு மாலையில் மைசூரு நகரில் சாலை மார்க்கமாக ஊர்வலமாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பா.ஜ.க. தொண்டர்கள் மோடியை வரவேற்க வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் நின்று கொண்டு, அவர் மீது பூக்களை வீசிக் கொண்டிருந்தனர். மோடியின் வாகனம் மைசூரு டவுன் சிக்ககடியாலா பகுதியில் சென்றபோது, அவரது வாகனத்தின் இடது பக்கத்தில் இருந்து ஒருவர் திடீரென செல்போனை வீசினார். அந்த செல்போன் மோடியின் வாகனத்தின் கேபின் மீது விழுந்து, பிறகு சாலையில் விழுந்தது. எனினும், பிரதமர் மோடி மீது செல்போன் படவில்லை. அதேபோல, மோடியும் தனது ஊர்வலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைசூரு முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.. மேலும், பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வீசியது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அப்போது, பிரதமர் மோடி வாகனத்தின் மீது வீசப்பட்ட செல்போன் பா.ஜ.க. தொண்டருடையது என்பதும், பிரதமரை பார்த்த மகிழ்ச்சியில் பூக்களை தூவி, கைகளை வேகமாக அசைத்தபோது, செல்போன் தவறுதலாக வீசப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. எனினும், உளவுத்துறையினரும், போலீஸாரும் தீவிர விசாராணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it