ஜிகாத் பற்றி புத்தகம்: மாஜி ஐ.பி. அதிகாரி படுகொலை!

ஜிகாத் பற்றி புத்தகம்: மாஜி ஐ.பி. அதிகாரி படுகொலை!

Share it if you like it

இஸ்லாமியர்களின் ஜிகாத் பற்றி 3 புத்தகங்களை எழுதிய மாஜி ஐ.பி. அதிகாரியை, காரை மோதி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள மானசா கங்கோத்ரி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.என்.குல்கர்னி. மத்திய புலனாய்வு பணியகத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 83 வயதான இவர், ‘…and yet God smiles’, ‘Sin of National Conscience’, ‘Facets of Terrorism in India’ என 3 புத்தகங்களை எழுதி இருக்கிறார். இந்த 3 புத்தகங்களுமே இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றியது. இதன் காரணமாக, இவரது புத்தகங்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டன. இவரது, 3-வது புத்தகம் 2019-ம் ஆண்டு அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் கைகளால் வெளியிடப்பட்டது. இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குல்கர்னி, “இன்று நாட்டில் 2 வகையான பயங்கரவாதம் இருக்கிறது. ஒன்று கம்யூனிஸ்ட், மற்றொன்று ஜிகாதி பயங்கரவாதம். இந்த 2 பயங்கரவாதமும் நாட்டில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. இவற்றை வேரோடு பிடுங்க வேண்டும் என்றால், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசுடன் கைகோர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், காரால் மோதச் செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் குல்கர்னி. இவர், தினசரி மாலை நேரத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 4-ம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, வழக்கமாகச் செல்லும் வழியில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது, எதிரே கார் வருவதைக் கண்ட குல்கர்னி, சாலையின் ஓரத்தில் சென்றிருக்கிறார். ஆனாலும், கார் அவரை நோக்கியே வந்தது. குல்கர்னி சுதாரிப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் குல்கர்னியை அடித்துத் தூக்கிவிட்டு நிற்காமல் சென்று விட்டது கார். இதில், சுமார் 5 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்ட குல்கர்னியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குல்கர்னி இறந்து விட்டார். இதுகுறித்து வி.வி.புரம் போக்குவரத்து போலீஸார் விபத்து வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், குல்கர்னி கார் மோதி கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, இந்த வழக்கு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், போலீஸார் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான், நம்பர் பிளேட் இல்லாத கார் மூலம், குல்கர்னியை திட்டமிட்டே மோதச் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குல்கர்னியின் மருமகன் சஞ்சயா அங்காடியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், குல்கர்னியை இதேபோல பலமுறை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், இதுகுறித்து அவர் லோக்கல் காவல் நிலையத்திலும், பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். குல்கர்னி ஏன் கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. எனினும், சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it