கர்நாடக மாநில அரசின் ஒரே சீருடைத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று அம்மாநில ஐகோர்ட் மறுப்புத் தெரிவித்து விட்டது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு ஹிந்து மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று கூறி, ஹிந்து மாணவ, மாணவிகள் கழுத்தில் காவித் துண்டு அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆகவே, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வர, கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடக மாநில அரசின் ஹிஜாப் தடைக்கு தடை விதிக்கக் கோரி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்.9-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித், அரசு உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டதோடு, விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.