ஆட்சி அமைத்தாரே… விடியல் தந்தாரா..?!

ஆட்சி அமைத்தாரே… விடியல் தந்தாரா..?!

Share it if you like it

தமிழக சட்டமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு, மே மாதம் இரண்டாம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அபார வெற்றி பெற்றது, திமுக கூட்டணி. அதன் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், மே மாதம் 7 ஆம் தேதி, தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஒரு வருட ஆட்சியில், 10 வருட சாதனை என்றார்கள்… அது என்ன?

பெண்களுக்கு சமையல் எரிவாயு விலையை குறைப்பதாக சொன்னார்களே! செய்தார்களா?

மகாகவி பாரதியாரின் சிலை திறப்பு விழா, தமிழ் புத்தாண்டு அன்று, கவர்னர் மாளிகையில் நடந்தது. அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது ஏன்? சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரருக்கு, இவ்வாறு அவ மரியாதை செய்யலாமா?

தமிழ் மொழியின் காவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள், எல்லா பள்ளிக் கூடத்திலும், தமிழ் வழிக் கல்வி என அறிவிக்கத் தயாரா? எளிய மாணவ – மாணவியர்கள் படிக்கும் அரசுப் பள்ளியில், ஹிந்தி மொழி படிக்கத் தடை போட்டவர்கள், தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிக் கூடத்திலும், அந்தத் தடையைப் போடுவார்களா?

பட்டியலின காவலர்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள், உலகப் புகழ் பெற்ற இசை ஞானியை, வன்மத்துடன் பேசிய காங்கிரஸ் பிரமுகரை, இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரை கைது செய்வார்களா?

கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிசத் தலைவர் பினராயி விஜயனை நேராக சந்தித்து, கேரளா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழக முதல்வர், தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை தீர்க்க, ஒருமுறையாவது கேரளா சென்று, இதுவரை ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தினாரா?

பெரும்பான்மையான மக்கள் விரும்பிக் கொண்டாடும் “தீபாவளி”, “விநாயகர் சதுர்த்தி” போன்ற இந்து மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொன்னாரா? மற்ற மத நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்பவர், ஒருமுறையேனும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வந்து, கொழுக்கட்டை சாப்பிடத் தயாரா?

ஏழைப் பெண்களுக்கு வழங்கப் படும் “தாலிக்கு தங்கம்” வழங்கும் திட்டம் ரத்து செய்யப் பட்டது.

தங்களுடைய ஆட்சியில், லாக்கப் மரணங்களே நடக்காது என சொன்னார்களே? தற்போது நடந்ததே! அதனைத் தடுக்க என்ன செய்தார்கள்?

“குறை ஒன்றும் இல்லை” என்ற வாசகத்துடன் தெரு எங்கும் போஸ்டர் காணப் படுகிறது. யாரேனும் ஏதாவது குறைக் கூறினால், வழக்கு போட்டு அவரை உள்ளே தள்ள முயல்கிறார்கள்! அதையும் மீறி பலரும் குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்!

மது விலக்கிற்கு எதிராகப் போராடினார்களே, பூரண மதுவிலக்கு கொண்டு வரத் தயாரா?

அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறைப் படி, பென்சன் வழங்கப் படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். ஆட்சிக்கு வந்த உடன், பழைய ஓய்வூதிய முறைப்படி, பென்சன் வழங்குவது சாத்தியமற்றது என கூறி வருகின்றனர்.

இது, அரசு ஊழியர்களை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றது. சொன்னார்களே! செய்தார்களா?

இந்த ஒரு வருட ஆட்சியில், தமிழக மக்களுக்கு என்ன கிடைத்தது?

சொத்து வரி உயர்வு :

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் சொத்து வரி மிகவும் அதிகமாக உயர்த்தப் பட்டது, மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் சில இடங்களில், சொத்து வரி 100 சதவீதம் அளவு உயர்த்தப் பட்டது. வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 150 சதவீதம் உயர்வு அறிவிக்கப் பட்டது.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் கல்வி, வணிக பயன்பாட்டு இடங்களுக்கு, சொத்து வரி அதிக அளவில் உயர்த்தப் பட்டது, தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

அறிவிக்கப் படாத மின்வெட்டு :

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு என்பது தொடர் கதையாகி வருவது, மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றது. அதிலும் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கிற்குப் பின்னர், தற்போது தான், வியாபாரமும், தொழிற்சாலைகளில் உற்பத்தியும் பெருகி கொண்டு வரும் சூழ்நிலையில், தொடர் மின்வெட்டால் பெரிய அளவில் வியாபாரம் பாதிக்கப் படுவதுடன், தொழில் வளர்ச்சியும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறது.

இதனால் வியாபாரிகள் குமுறி வருவதுடன், தமிழக மக்களை மீண்டும் இருண்ட காலத்திற்கு, அரசு அழைத்துச் செல்வதாக விமர்சித்தும் வருகின்றனர்.

ரத்து செய்யப் படாத நீட் தேர்வு :

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே “நீட் தேர்வு ரத்து” எனக் கூறி ஆட்சி அமைத்தவர்கள், ஆட்சி அமைத்து ஓராண்டு காலம் ஆகியும், இன்னும் நீட் தேர்வு ரத்து செய்யப் படாமலே உள்ளது. இதனால், மாணவர்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் நிலவி வருகின்றது.

நீட் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டுமா? அல்லது தேர்வு ரத்து செய்யப் படுமா? என்ற எண்ணத்துடனே, மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருவதால், அவர்களால்  தங்களது இயல்பான திறமையை, வெளிக் காட்ட முடியாமல், பாதிக்கப் படுகின்றனர்.

தனி மனிதத் துதிப்பாடு :

சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள், யார் எப்போது பேசத் தொடங்கினாலும், தங்களது உரையில், திமுக சட்டமன்ற உறுப்பினரை வாழ்த்துவதும், அவர் நடித்த படங்களின் பெயர்களை சொல்லி, அவரை புகழ்வதும் என, ஒருவரை பாராட்டிப் பேசும் அரங்கமாகவே, தமிழக சட்டப்பேரவை மாறி வருவதாக, அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் :

சாலை விபத்துகளில் சிக்கி, உயிருக்குப் போராடும் நபர்களுக்கு, தக்க நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவ மனையில் சேர்க்கும் நபர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு அளித்து, அவர்களை கவுரவப் படுத்தும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமல் படுத்தியது.

அந்த மத்திய அரசின் திட்டத்தை, மாநில அரசு அறிவிப்பது போல அறிவித்து, பெருமைத் தேடிக் கொள்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த போரின் போது, உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவ – மாணவியர்களை, பெரிய முயற்சி எடுத்து, மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்தது. ஆனால், தமிழக அரசின் முயற்சியால் தான், அவர்கள் மீட்கப் பட்டது போல, போலியாக சித்தரிக்க முயன்றதைக் கண்ட பொது மக்கள், அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம், நாம் அனைவரும் அறிந்ததே…

இந்த ஒரு வருட ஆட்சியில், யாருமே செய்ய முடியாத, 10 வருட சாதனைகளை செய்ததாக சொன்னார்களே… அது இது தானோ?!

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it