ஏழை விவசாயிகளின் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தட்டிக் கேட்ட விவசாயியை, உன் மீது குண்டாஸ் போடுவேன் என்று மிரட்டிய கரூர் கலெக்டர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் தென்னிலை முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி வசதி படைத்தவர்களின் நிலங்களை தவிர்த்துவிட்டு, ஏழை விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாகச் செல்வதாக கூறப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். மேலும், இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது, கலெக்டர் பிரபுசங்கர் விவசாயி ராஜாவிடம், “இது அரசின் கொள்கை முடிவாக உள்ள திட்டம். இத்திட்டத்திற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதபோது, நீங்கள் ஒருவர் மட்டும் போராட்டத்தில் ஈடுகிறீர்கள். மேலும், வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் நீங்கள் தலையிடுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வருகிறது. இப்புகார்களின் அடிப்படையில் உங்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இந்த உரையாடலை நீங்கள் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாலும் நான் கவலைப்படப்போவதில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
எனினும், மேற்கண்ட மாவட்ட கலெக்டருடனான உரையாடலை ஆடியோவாக பதிவு செய்த விவசாயி ராஜா, அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகவே, விவசாயி ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வதில் கலெக்டருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இதுவும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு அம்சமோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.