அமைச்சருடன் மோதல்… ரூ.23.50 கோடி அபராதம்… தி.மு.க.வுக்கு கல்தா..? எம்.எல்.ஏ. அதிரடி முடிவு!

அமைச்சருடன் மோதல்… ரூ.23.50 கோடி அபராதம்… தி.மு.க.வுக்கு கல்தா..? எம்.எல்.ஏ. அதிரடி முடிவு!

Share it if you like it

அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு 23.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தி.மு.க.விலிருந்து விலகப்போவதாக எம்.எல்.ஏ. தரப்பு முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவலால் அறிவாலய வட்டாரம் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதேசமயம், மேற்கண்ட கல்குவாரிகள் சிலவற்றில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, அளவுக்கதிகமான ஆழத்தில் கற்களை வெட்டி எடுப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றன. எனவே, கல்குவாரி முறைகேடுகள் குறித்து தெரிந்துகொள்ள டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி, முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி ஆய்வு தொடங்கியது. இதை எதிர்த்து, கரூர் மாவட்டத்திலுள்ள கல்குவாரி உரிமையாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், இந்த ஆய்வை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களிலும் கல்குவாரி உரிமையாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

எனினும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வை முடித்தனர். இவற்றில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட குவாரிகளுக்கு 44,65,28,357 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்குச் சொந்தமான குவாரிக்கு மட்டும் 23.54 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமைச்சர் கே.என்.நேரு தூண்டுதலின் பேரில்தான் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ. பழனியாண்டி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் தவறானது என்றும், இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அபாரதம் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் நேருவின் டார்ச்சரால் தி,மு.க.விலிருந்து விலகப் போவதாக தனது ஆதரவாளர்களிடம் பழனியாண்டு கூறிவருகிறாராம். இதனால், என்ன செய்வதென தெரியாமல் அறிவாலய வட்டாரம் கலக்கத்தில் இருக்கிறதாம்.


Share it if you like it