ஜாதி ரீதியாக துன்புறுத்துவதுதான் சமூகநீதியோ?

ஜாதி ரீதியாக துன்புறுத்துவதுதான் சமூகநீதியோ?

Share it if you like it

கரூரில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியிடம் ஜாதி ரீதியான பாகுபாடு காட்டுவதுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நன்னியூர் ஊராட்சி. இதன் தலைவராக இருப்பவர் சுதா. இவர், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சியில் தலா 5 உறுப்பினர்கள் வீதம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சம பலத்தில் இருக்கின்றன. இந்த சூழலில், தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி, அடிக்கடி அலுவலகத்துக்கு வந்து தலைவர் சுதாவுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, அ.தி.மு.க.வைச் சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் நல்லுச்சாமி, ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டி வருவதாகவும் தகவல். மேலும், ஊராட்சி செயலாளர் நளினி, அவரது கணவர் மூர்த்தி ஆகியோரும் பணிகளுக்கு ஒத்துழைப்புத் தராமல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, நேற்று மாலை வாங்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அப்புகாரில், 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் என்னை கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதோடு, ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டி வருகிறார். அதேபோல, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசாமி, தேவையில்லாமல் அடிக்கடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து என்னை அலுவலக பணிகளை செய்ய விடாமல் இடையூறு செய்து வருகிறார். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஊராட்சிச் செயலாளர் நளினி, அலுவலக பணிகளில் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிறார். மேலும், நளினியின் கணவர் மூர்த்தி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து ஊதியம் கேட்டு வருகிறார். ஆகவே, மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இப்புகார் மனுவை, வாங்கல் போலீஸார் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அதிகாரிகள் இருவரும் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு, ஊராட்சி மன்றத் தலைவி சுதாவை வாங்கல் காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையிலும் விசாரணை நடத்தினார். தமிழகம் முழுவதும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அவமதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கரூரில் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it