இந்திய ராணுவத்தில் 39 ஆண்டுகள், மிகச் சிறப்பாக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற டைனி தில்லான்’ பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மற்றும் இந்திய ராணுவம் மேற்கொண்ட மிக உறுதியான நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. காஷ்மீரில் பணியாற்றிய ராணுவ உயர் அதிகாரிகளில் மிக முக்கியமானவர் டைனி தில்லான்
இந்திய ராணுவத்தில் 39 ஆண்டுகள் பணிபுரிந்த பின் லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். டைனி நேற்றைய தினம் (31.1.2022) ஓய்வு பெற்றார். இவர், பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் பணியாற்றியவர்.
இந்திய இராணுவத்தில் 1983-ல் இணைந்தார். காஷ்மீரில் இவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம், அம்மாநில மக்களின் ஹீரோவாக இன்று வரை அவர் பார்க்கப்பட்டு வருகிறார், என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. காஷ்மீரை தளமாகக் கொண்ட XV கார்ப்ஸின் தலைவராக இருந்தபோது, இவர் உருவாக்கிய ‘ஆப்ரேஷன் மா’ காஷ்மீர் மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்று இருந்தது.
ஐம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தால். இந்திய ராணுவம் அவர்களை சுட்டு வீழ்த்துவதுடன் பயங்கரவாதிகளுக்கு, அடைக்கலம் கொடுக்கும் உள்ளூர் இளைஞர்களும் கொல்லப்படும் நிலையே தொடர்கதையாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும், நபர்களின் பெற்றோர்களை சண்டை நடைபெற்று வரும் களத்திற்கே நேரடியாக அழைத்து வந்து ஒலிபெருக்கி வாயிலாக பேச வைத்ததன் மூலம் மூளை சலவை செய்யப்பட்ட, அப்பாவி இளைஞர்கள் பலர் மனம் திருந்தி ராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட்டது இதுவே ’ஆப்ரேஷன் மா’ ஆகும்.
“நன்மை செய்து சேவை செய்யுங்கள், பிறகு உங்கள் தாய் தந்தைக்கு சேவை செய்யுங்கள். இதுவே புனித குர்ஆனில் கூறப்பட்டு உள்ளது. தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் இளைஞர்களுக்கு இதுவே நான் சொல்லும் செய்தி” ஆகும் என்று இவர் தெரிவித்து இருந்தார். 2019 இல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக இருந்த கம்ரான் என்ற ‘காசி’யை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்த இவர் வகுத்து கொடுத்த திட்டமே நல்ல பலனை கொடுத்தது. இது போன்ற பல பயங்கரவாதிகள் வந்து சென்றுள்ளனர், நாங்கள் திடமான இடத்தில் தான் நிற்கிறோம் என்று ஒருமுறை இவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.