உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமீபத்தில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல, எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ‘சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருக்கிறது.
நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதை விடுதலை அமுதப் பெருவிழாவாக கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் ஏற்பாடு செய்தன. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி நவம்பர் 19-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 10 நாள் நிகழ்ச்சியாக ‘சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 3,000 முதல் 5,000 பேர் வரை அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.