கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலுமிருந்து தாம் விலகுவதாக கவிதா கிருஷ்ணன் கூறியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தவர் கவிதா கிருஷ்ணன். இவர், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் அக்கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அலங்கரித்தவர். இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றவர்.
ஏழை மக்களின் உரிமைக்காக போராடுகிறேன் என்ற பெயரில் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் தேசத்திற்கு விரோதமாக மட்டுமே இருக்கும். இதனிடையே, காஷ்மீரின் 370 -வது சட்ட பிரிவை மத்திய அரசு நீக்கியதற்கு, தனது கடும் கண்டனத்தை தெரிவித்தவர். இவர், தெரிவித்த கருத்துக்களை பாகிஸ்தான் ஐ.நா.வில் மேற்கோள் காட்டும் அளவிற்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் குறித்து தனது கருத்தினை கவிதா தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக, ரஷ்யா குறித்து அவர் தெரிவித்த கருத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலுமிருந்து தாம் விலகுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.