டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 15 ஆம் தேதி சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கவிதா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் கவிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் கவிதாவை மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.