இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேதத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேணடும் என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கென்ய நாட்டின் மாஜி பிரதமர்.
கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா. இவரது மகள் ரோஸ்மேரி ஒடிங்கா. இவருக்கு 2017-ம் ஆண்டில் கண்ணில் ஏற்பட்ட கட்டி காரணமாக பார்வை சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. முதலில் உள்நாட்டிலேயே வைத்தியம் பார்த்தவர்கள், சிகிச்சை பலனளிக்காததால் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளில் மேல்சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், நாளுக்கு நாள் பார்வை குறைந்து வந்ததே தவிர, பார்வை கிடைக்கவில்லை. 2019-ம் ஆண்டில் தனது பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டார் ரோஸ்மேரி.
இந்த நிலையில்தான், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கூத்தாட்டிக்குளம் எனும் இடத்தில் உள்ள ஸ்ரீதரியம் ஆயுர்வேதிக் கண் மருத்துவமனையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து, ஒடிங்கா குடும்பத்தினர், ஸ்ரீதரியம் வந்து ரோஸ்மேரியை ஆயுர்வேத சிகிச்சைக்கு உட்படுத்தினர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில், துணைத் தலைவர் ஹரி மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முதல்கட்ட சிகிச்சையிலேயே சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால், ஒடிங்கா குடும்பத்தினர் தொடர் சிகிச்சை மேற்கொண்டனர். 4 மாதங்களிலேயே பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் மீண்டும் கென்யாவுக்கே திரும்பினார். எனினும், இரண்டு ஆண்டுகளாக தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். தற்போது, ரோஸ்மேரிக்கு முழுமையான கண் பார்வை கிடைத்து விட்டது. செல்போனில் வரும் குறுஞ்செய்திகளைக் கூட படிக்கும் அளவுக்கு தனது பார்வை மேம்பட்டிருப்பதாக அவர் கூறியதால், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த சூழலில், இறுதிக்கட்ட சிகிச்சை பெறுவதற்ககாகவும், ஸ்ரீதரியம் ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் குழுவுக்கு நன்றி தெரிவிக்கவும், பிப்ரவரி 7-ம் தேதி மீண்டும் கூத்தாட்டுக்குளத்துக்கு வந்தது ஒடிங்கா குடும்பம். அங்கு 5 நாட்கள் தங்கி ரோஸ்மேரிக்கு இறுதிக்கட்ட சிகிச்சையை மேற்கொண்டனர். பின்னர், கென்யா திரும்ப முடிவு செய்த அவர்கள், பிப்ரவரி 13-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி கூறினர்.
அப்போதுதான், தனது மகளுக்கு மீண்டும் கண் பார்வையை கொடுத்த ஆயுர்வேத சிகிச்சையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் ரைலா ஒடிங்கா. மேலும், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் தான் வெற்றிபெற்றி பெற்றால், தலைநகர் நைரோபியில் ஸ்ரீதரியத்தின் ஆயுர்வேத மருத்துவமனையை அமைப்பேன் என்று கூறியிருக்கிறார்.